மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் 75 ஆவது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அவரின் புகைப்படம், சிலை போன்றவற்றிற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். மேலும், இணையத்தில் வாழ்த்தி பதிவிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் இது குறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், “இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அஇஅதிமுக மக்களுக்காகவே இயங்கும்" என சூளுரைத்து, துரோகிகளையும்,எதிரிகளையும் தகர்த்தெறிந்து கழகத்தை காத்து, கல்லும் கனியாகும் கருணையால் மக்களுக்காக அள்ளி அள்ளி நலத்திட்டங்களை கொடுத்து எல்லோர்க்கும் அன்னையெனத் தொண்டாற்றி, மகத்தான சாதனைகள் பல புரிந்த மக்கள் தலைவி,சரித்திர வெற்றிகளும் மாறாப் பெரும் புகழும் கொண்ட புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பவள விழா பிறந்தநாளில், நூற்றாண்டுக் கனவை நிறைவேற்ற உறுதியேற்று அவர் தம் புகழை போற்றி வணங்குகிறேன்” எனக் கூறியுள்ளார்.
தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில், அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கும் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். சிலைக்கும் மலர்த்தூவி மரியாதை செலுத்த எடப்பாடி பழனிசாமி தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பில் அதிமுக பொதுக்குழு செல்லும் என கூறப்பட்டுள்ளதால் இடைக்கால பொதுச்செயலாளராக கட்சியின் அலுவலகத்திற்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.