திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தொடர்ந்து ஆறாவது முறையாக வெற்றி பெற்று திமுக கோட்டையாக்கி தக்கவைத்து வந்ததின் மூலமே முதல்வர் ஸ்டாலின், சக்கரபாணிக்கு உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் பதவியையும் கொடுத்து இருக்கிறார் என்று திண்டுக்கல் மாவட்ட திமுகவினர் பேசிக்கொள்கின்றனர்.
ஏற்கனவே திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்ற பகுதிகளை பிரித்து கிழக்கு, மேற்கு என இரண்டு மாவட்டமாக அறிவித்திருப்பதின் மூலம் ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், நத்தம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளின் மேற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் சக்கரபாணி இருந்து வருகிறார். அதுபோல் அதிமுகவில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்து வருவதால் அவருடைய நத்தம் சட்டமன்ற தொகுதி கிழக்கு மாவட்டத்தில் இருக்கிறது. அதேபோல் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் மேற்கு மாவட்ட செயலாளராக இருப்பதால் வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் சீனிவாசனின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இப்படி இரண்டு முன்னாள் அமைச்சர்களின் கட்டுப்பாட்டிலுள்ள ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், நத்தம் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதியில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அமைச்சர் சக்கரபாணி ஒவ்வொரு பகுதியாக சென்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டி போடும் திமுக வேட்பாளர்களுக்கு தீவிரமாக பிரச்சாரம் செய்ததுடன் மட்டுமல்லாமல் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களையும், சலுகைகளையும் வாக்காள மக்களிடம் எடுத்துக்கூறி ஆதரவு திரட்டி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றியை தக்க வைத்திருக்கிறார்.
இது சம்பந்தமாக மேற்கு மாவட்டத்தில் உள்ள கட்சி பொறுப்பாளர்கள் சிலரிடம் கேட்ட போது, “எங்க அமைச்சர் தொகுதியான ஒட்டன்சத்திரம் நகர்மன்றத்தலைவர் பதவியை கடந்த முறை அ.தி.மு.க. கைப்பற்றியிருந்தது. ஆனால், இந்த முறை நகரில் உள்ள 18 வார்டுகள் தனிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றி நகர்மன்றத்தலைவராக திருமலைசாமியையும் நகர்மன்றத் துணைத்தலைவராக வெள்ளைசாமியையும் அமைச்சர் நியமித்திருக்கிறார். இந்த அளவுக்கு நகரத்திலேயே அதிமுக படுதோல்வி அடைந்து ஒரு வார்டை கூட கைப்பற்ற முடியாமல் டெப்பாசிட்டையும் இழந்துவிட்டது. அதேபோல் கீரனூர் பேரூராட்சியில் உள்ள 15-வார்டுகளையும் திமுக கைப்பற்றி அதன் தலைவராக கருப்புசாமியை அமைச்சர் நியமித்து 100 சதவீத வெற்றியை கொடுத்திருக்கிறார். இதேபோல் அதிமுக கோட்டையாக இருந்த வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள எரியோடு, வேடசந்தூர், அய்யலூர், வடமதுரை, பாளையம் ஆகிய ஐந்து பேரூராட்சிகளில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஐந்து பேரூராட்சிகளை திமுக பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றி இருக்கிறது. அதன்மூலம் வேடசந்தூர் பேரூராட்சி தலைவராக மேகலா, அய்யலூர் பேரூராட்சி தலைவராக கருப்பணன், வடமதுரை நிரூபாராணி, பாளையம் பழனிச்சாமி, எரியோடு முத்துலட்சுமி ஆகிய ஐந்து பேர் ஆளுங்கட்சி தலைவர்களாக உட்கார வைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அதிமுக ஒரு சில வார்டுகளை மட்டுமே கைப்பற்றி படுதோல்வி அடைந்தது. இதில் அய்யலூர் பேரூராட்சி உருவான காலத்திலிருந்தே அதிமுக கோட்டையாக இருந்த அய்யலூர் பேரூராட்சியை தி.மு.க. கோட்டையாக அமைச்சர் சக்கரபாணி உருவாக்கி இருக்கிறார். அந்த அளவுக்கு ஏற்கனவே வேடசந்தூர் தொகுதியில் திமுக கைப்பற்றி அதன் சட்டமன்ற உறுப்பினராக காந்திராஜன் இருந்து வரும் நிலையில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மூலம் ஒட்டுமொத்த பேரூராட்சிகளையும் ஆளுங்கட்சி கைப்பற்றி இருப்பதை கண்டு முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்ட செயலாளருமான சீனிவாசனை கொஞ்சம் அதிர்ந்து இருக்கிறார். அதேபோல் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தொகுதியான நத்தம் சட்டமன்ற தொகுதியில் உள்ள நத்தம் பேரூராட்சியில் இருக்கும் 18 வார்டுகளில் 4-வார்டுகளை மட்டுமே அதிமுக கைப்பற்றியதே தவிர 14 வார்டுகளை திமுக கூட்டணி கைப்பற்றி அதன்மூலம் திமுகவை சேர்ந்த பேரூராட்சி தலைவராக சிக்கந்தர் பாட்சா தலைவராக உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். அமைச்சர் சக்கரபாணி அந்த அளவுக்கு அதிமுக கோட்டையான நத்தம் பேரூராட்சியையும் திமுக கைப்பற்றியிருக்கிறது. இப்படி மேற்கு மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதியையும் திமுக கோட்டையாக அமைச்சர் சக்கரபாணி உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அதுபோல் நகர்மன்றதலைவர் மற்றும் பேரூராட்சி தலைவர்கள் வெற்றி பெற்று பதவியேற்ற உடனேயே ஒவ்வொரு பகுதிக்கு சென்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மக்களிடம் நல்ல பெயர் வாங்கும் அளவுக்கு உங்கள் பணி சிறக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்” என்று கூறினார்கள்.
அதுபோல் முன்னாள் முதல்வர் கலைஞரின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டத்திற்கு பொறுப்பாளராக இருந்து வரும் சக்கரபாணி அந்த திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூத்த நல்லூர் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைபூண்டி ஆகிய நான்கு நகராட்சிகளையும் தி.மு.க கோட்டையாக உருவாக்கி இருக்கிறார். அதுபோல் அங்குள்ள கரடாச்சேரி, குடவாசல், வலங்கைமான், நன்னிலம், பேரளம், நீடமங்கலம், முத்துப்பேட்டை ஏழு பேரூராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியுள்ளது அந்த அளவுக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் மாவட்டத்தையும் தொடர்ந்து தி.மு.க. கோட்டையாக இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மூலம் உருவாக்கி கொடுத்து இருக்கிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்கு மாவட்ட மூன்று சட்டமன்ற தொகுதியில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளிலும், உள்ளாட்சி தேர்தல் பணிகளை செய்து கொண்டு திருவாரூர் மாவட்டத்திலயும் தேர்தல் பணிகளை செய்து அதன்மூலம் 100 சதவிகிதம் வரை வெற்றி வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்து முதல்வர் ஸ்டாலினிடம் பாராட்டையும் பெற்றுள்ளார் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி.