முன்னாள் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனையில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த மாதம் இறுதிக்குள் கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்தவும், அது முடிந்த பின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் ஓபிஎஸ் திட்டமிடுவது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாநாட்டிற்கான தேதியை இறுதி செய்வது குறித்தும் திருச்சியை விட மிக பிரம்மாண்டமாக அடுத்த மாநாட்டை நடத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், “திருச்சி மாநாடு நான் எதிர்பார்த்த அளவில் தொண்டர்களின் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாநாடு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. மண்டல மாநாடு, மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்வது குறித்து இன்று ஆலோசனை செய்ய உள்ளோம். தமிழ்த்தாய் வாழ்த்தை யார் அவமதித்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறோம்” என்றார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் போது கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என இபிஎஸ் சொல்லி இருந்தார். ஆனால், அந்த தேர்தலில் அதிமுக 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணியிடம் தோல்வியடைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.