அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பினை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த மேல் முறையீட்டு விசாரணையில் அதிமுக பொதுக்குழு செல்லும் என இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பினை வரவேற்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கொண்டாடி வரும் வேளையில் மேல்முறையீட்டிற்கு செல்லும் திட்டம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவிக்கின்றது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் "நமக்குள் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க நீதிமன்றம் சென்றோம். நீதிமன்றத்தின் கருத்தை விமர்சிக்க தயாராக இல்லை. இன்றும் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் இருந்துகொண்டிருக்கிறார். நான் எடப்பாடி பழனிசாமியை கேட்பதெல்லாம் நான்கரை ஆண்டுகள் முதல்வராக இருக்க 11 சட்டமன்ற உறுப்பினர்களுடன் எந்த நிபந்தனையும் இன்றி ஓபிஎஸ் உங்களை ஆதரித்தார், மீண்டும் முதல்வர் வேட்பாளராக உங்களையே தேர்ந்தெடுத்தார், எதிர்கட்சித்தலைவராக தேர்ந்தெடுத்தார் இதற்கெல்லாம் நீங்கள் கொடுக்கும் நிலைப்பாடு என்ன?
கட்சியை அழிக்கப்பார்க்காதீர்கள். நீங்கள் இவ்வளவு பெரிய உச்சத்திற்கு செல்வதற்கு உங்களுக்கு வாழ்வு கொடுத்தது அதிமுக. கட்சியையும் கட்சித் தொண்டர்களையும் அழிப்பதற்கான நடவடிக்கை எடுப்பதை கைவிடுங்கள். பொதுச்செயலாளர் பதவியில் யாரும் இருக்கக்கூடாது என முடிவு எடுத்து ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் அவர்களையும் இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் அவர்களையும் தேர்ந்தெடுத்தோம். ஜெயலலிதா இருந்த பொதுச்செயலாளர் பதவியில் யாரும் இருக்க மாட்டோம் என சொல்லிவிட்டு, அந்த நேரத்தில் தற்காலிக பொதுச்செயலாளராக இருந்த சசிகலா அவர்களை நீக்கினோம் அந்த பொதுச்செயலாளர் பதவியில் அமர அடம்பிடித்து எந்த விதத்தில் நியாயம்" என கேள்விகளை எழுப்பியுள்ளார்.