அதிமுக பொதுக்குழு, செயற்குழு வரும் 23ஆம் தேதி கூடவுள்ள நிலையில், அதிமுகவினர் மத்தியில் ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுத்துவருகிறது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வரும் நிலையில், பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஓபிஎஸ்ஸின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஒரத்தநாடு வைத்திலிங்கம் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பில் இந்தக் கடிதம் குறித்து தெரிவித்த அவர், கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை வாசித்தார். எம்.ஜி,ஆர், ஜெயலலிதா காலத்திலிருந்து பொதுக்குழுவிற்கு சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்பட்டதாகவும், வரும் 23ஆம் தேதி நடைபெறும் கூட்டத்திற்கு அவர்கள் அழைக்கப்படாதது தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் நலன் கருதி கட்சிக்காக தியாகம் செய்தவர்கள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், ஒன்றிய பெருந்தலைவர்கள், நகர்மன்ற தலைவர்களின் வேண்டுகோளை ஏற்றும், தற்போது நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டும் இந்தப் பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.