பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பேச்சுகளால் அதிமுக - அண்ணாமலை இடையே கருத்து மோதல் ஏற்பட்டு கூட்டணி முறிவு வரை சென்றுள்ளது. இரு கட்சிகளின் தலைமைகளும் முறிவுக்குப் பின் விமர்சனங்களை வைக்கக்கூடாது என உத்தரவிட்டிருந்தாலும் அடிமட்டத் தொண்டர்கள் போஸ்டர்கள் மூலம் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஒருவரை ஒருவர் விமர்சிக்கக் கூடாது என்ற பாஜக, அதிமுக தலைமைகளின் உத்தரவே மீண்டும் கூட்டணி பேசுவதற்கான அடித்தளம்தான் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் பாஜக ஓபிஎஸ் தரப்புடன் கூட்டணி வைக்கப் போவதாக வியூகங்கள் கிளம்பியுள்ளது. அண்மையில் பெங்களூருவில் இந்தியா கூட்டணி சார்பில் கூட்டம் நடைபெற்ற அதே நாளில் டெல்லியில் என்.டி.ஏ எனும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டமும் நடைபெற்றது. அதில் பாஜகவுடன் முந்தைய தேர்தலில் கூட்டணியிலிருந்த தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் அழைக்கப்படவில்லை. இந்நிலையில் பாஜக ஓபிஎஸ் உடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதா என கேள்விகள் எழுந்துள்ளது. இந்தநிலையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ் நாளை மாலை இது குறித்து அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.