திமுக எம்.எல்.ஏ.க்களான திருவொற்றியூர் கே.பி.பி.சாமியும், குடியாத்தம் காத்தவராயனும் அடுத்தடுத்து இறந்ததால், அவர்களின் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடக்க இருப்பதாகச் சொல்கின்றனர். இது பற்றி விசாரித்த போது, சட்டமன்ற கூட்டத் தொடர் ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. இது நிறைவடைந்ததும், விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் முடிவில் எடப்பாடி அரசு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதோடு சேர்த்து, மேற்கண்ட இரண்டு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையும் நடத்திவிட வேண்டுமென்ற ஆர்வத்தில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார் என்கின்றனர். அதற்கு ஓ.பி.எஸ்., சட்டமன்ற இடைத் தேர்தலை தலைமைத் தேர்தல் ஆணையம்தான் நடத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை மாநிலத் தேர்தல் கமிஷன் நடத்தும். அதனால் இந்த இரண்டு தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த முடியுமா என்பதைத் தேர்தல் அதிகாரிகள்தான் சொல்ல வேண்டும். அதனால் அவர்களுடன் நாம் கலந்து பேசி முடிவெடுக்கலாம் என்று சொல்லியிருப்பதாக கூறுகின்றனர். இதைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்ட எடப்பாடி தயாராக இருப்பதாக சொல்கின்றனர்.