
சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 25ஆம் தேதி (25.02.2025) 19வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக்கூட்டம் கூட்டப்பட உள்ளது என முடிவெடுக்கப்பட்டது. 2026ஆம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில், நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளை மத்திய அரசு மறுசீரமைப்பு செய்ய வாய்ப்புள்ளது. இதனால் தமிழ்நாடு 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக பா.ம.க. தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் சேலத்தில் கடந்த 26ஆம் தேதி (26.02.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி கொடுக்க மறுப்பது தவறு ஆகும். தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாமக பங்கேற்கும்” எனத் தெரிவித்திருந்தார்.அதே போன்று அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (28.12.2025) சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “ மார்ச் 5ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 2 பேர் கலந்து கொள்வார்கள். அந்த 2 பேரும் அதிமுகவின் நிலைப்பாட்டை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுத்துச் சொல்வார்கள்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பாஜக பங்கேற்காதது தொடர்பாகவும், அதற்கான காரணத்தையும் விளக்கி முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நாம் தமிழர் கட்சியும் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.