Skip to main content

ஓ.பி.எஸ். பிறந்தநாள் கொண்டாட்டம்.. கடும் போக்குவரத்து நெரிசல்.. முகம் சுளித்த பொதுமக்கள்..

Published on 15/01/2021 | Edited on 15/01/2021

 


தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ன் பிறந்த நாளை முன்னிட்டு தேனியில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினர் கொண்டாடினர்.

 


ஜனவரி 14ஆம் தேதி ஓ.பி.எஸ்.-ன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு தனது 70வது பிறந்த நாளை ஓ.பி.எஸ். கொண்டாடினார். அதிகாலை தன் தாயாரிடம் ஆசி வாங்கிய ஓ.பி.எஸ். அதைத் தொடர்ந்து குடும்பத்தாரின் வாழ்த்துகளை பெற்றார்.
 


பெரியகுளத்தில்  உள்ள அக்கரகாரம் பகுதியில் இருக்கும் ஓ.பி.எஸ். வீடு பகுதி முழுவதும் கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் பெரும் திரளாக ஓ.பி.எஸ்.காக காத்திருந்தனர். வீட்டை விட்டு  வெளியே வந்த ஓ.பி.எஸ். பொறுப்பாளர்களையும் தொண்டர்களையும் பார்த்து இருகரம் கூப்பி வணங்கினார். அதைக் கண்டு உற்சாகமடைந்த தொண்டர்கள், ‘மக்களின் முதல்வர் ஓ.பி.எஸ்., வருங்கால முதல்வர் ஓ.பி.எஸ்.’ என்று கோஷம் போட்டனர்.

 


கட்சிப் பொறுப்பாளர்கள் மாலை, சால்வைகளை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்.க்கு வாழ்த்து தெரிவித்தார். அதுபோல் அதிகாலையிலேயே  பிரதமர் மோடி ஓ.பி.எஸ்.-க்கு பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பியிருந்தார். மேலும், மதியம் 12 மணிக்கு தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஓ.பி.எஸ்.-க்கு நேரடியாகவே வாழ்த்து தெரிவித்தார். அதுபோல் பா.ஜ.க.வின் தேசிய தலைவர்  ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  உள்பட  பல பா.ஜ.க. தலைவர்களும் ஓ.பி.எஸ்.க்கு வாழ்த்து தெரிவித்தனர். 

 


தமிழக அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் முன்னாள் அமைச்சரான நத்தம் விஸ்வநாதன். முனுசாமி  உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பலரும் ஓ.பி.எஸ்.க்கு நேரில்வந்து பூங்கொத்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததுடன் மட்டுமல்லாமல், சாமி சிலைகள் உள்பட நினைவு பரிசுகளை வழங்கினார்கள். இதில் சென்னையிலிருந்துவந்த கட்சி பொறுப்பாளர் சிலர் 6 அடி உயரமுள்ள வெள்ளியினாலான வேல்-ஐ ஓ.பி.எஸ்.க்கு பிறந்த நாள் பரிசாக கொடுத்தனர். 

 

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதியில் உள்ள கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் வழக்கத்தைவிட பெருந்திரளாக கலந்துகொண்டு ஓ.பி.எஸ்.க்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனால் பெரியகுளம் நகரத்தில் பல மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் டென்ஷன் அடைந்த பயணிகள் பேருந்தைவிட்டு இறங்கி நடை பயணமாகச் சென்றனர். அதேபோல், ஓ.பி.எஸ். தம்பி ஓ.ராஜா, பெரியகுளத்தில் உள்ள காளியம்மன் கோவிலில்  அன்னதானம் வழங்கினார். 

 

மாவட்டத்தில் உள்ள போடி, தேனி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஓ.பி.எஸ்.காக கட்சிப் பொறுப்பாளர்கள் அன்னதானமும் வழங்கினார்கள். மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் அங்கங்கே பேனர்களை  வைத்து வாழ்த்து தெரிவித்தனர். அதில், பெரும்பாலான பேனர்களில் முதல்வர் இ.பி.எஸின் படம் சிறிதாகவும், ஓ.பி.எஸ். படம் பெரிதாகவும் இருந்தன. பல பேனர்களில் இ.பி.எஸ். படம் இல்லாமல், ஓ.பி.எஸ். படம் மட்டுமே போட்டுவைத்து வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதோடு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வாங்கிக் கொடுத்ததின் பேரில் ‘ஜல்லிக்கட்டு தந்தவரே’ என்று ஓ.பி.எஸ்-ஐ புகழ்ந்து அரண்மனை, புதூர்சுப்பு உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பல இடங்களில் பேனர்களை வைத்திருந்தனர்.

 


தேனி பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த மகனுமான ரவீந்திரநாத் குமாரும், இளைய மகனான ஜெயபிரதீப்பும் ஓ.பி.எஸ்-ன் பிறந்த நாளை முன்னிட்டு மரக் கன்றுகளைப் பல பகுதிகளில் நட்டனர். எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் ஓ.பி.எஸ்.-ன் பிறந்தநாள் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு இருப்பதைக் கண்டு எதிர்க்கட்சியினரே அரண்டு போய்விட்டனர்.


 

சார்ந்த செய்திகள்