கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி சென்னை கோட்டூர்புரத்தில் பில்டர் வீட்டில் தினகரனை சந்தித்தார் துணை முதல்வர் ஓபிஎஸ். அப்போது, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டு நாம் இருவரும் இணைந்து ஆட்சி செய்வோம் என்று தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து, ‘ஓபிஎஸ் என்னை சந்தித்தது உண்மை’ என கூறி, டிடிவி தினகரன் மேலும் பரபரப்பை கூட்டினார். இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இன்று இரவு செய்தியாளர்களை சந்தித்து, இது குறித்து விளக்கம் அளித்தார் ஓபிஎஸ்.
அப்போது அவர், ’’தினகரன் ஒரு புது பிரச்சனையை தாமாகவே சிந்தித்து குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு அதை முதலில் தங்கதமிழ்ச்செல்வனை பேசச்சொல்லி, பத்திரிகைகளுக்கு பேட்டி அளிக்கச்செய்து, இன்று அவரே அந்த பேட்டியை தொடர்ந்திருக்கிறார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக கழக நிர்வாகிகள் கூட்டம் தொகுதிக்கு உட்பட்டு நடத்தப்பட்டது. அக்கூட்டத்தின் மூலம் அதிமுகவினர் அனைவரும் சிந்தாமல் சிதறாமல் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக இருந்ததை, அங்கு நாங்கள் பேசியதைக்கேட்டு ஒரு குழப்பமான மனநிலைக்கு வந்திருக்கிறார் தினகரன்.
ஒரு வாரத்திற்கு முன்பாக பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கதிர்காமு, தினகரனை அழைத்துக்கொண்டு சமுதாய ரீதியிலான ஒரு கூட்டத்தில் கலந்துகொள்ளச்செய்து, அங்கு தினகரன் பேசுகின்றபொழுது, அப்பட்டமான உண்மைக்கு மாறான ஒரு பொய்யான செய்தியை பேசினார். என்ன பேசினார் என்றால்... கதிர்காமை நான் 50 கோடி தருகிறேன். எங்கள் பக்கம் வந்துவிடுங்கள் என்று அழைத்ததாகவும், அதற்கு அவர் முடியாது என்று சொன்னதாகவும், அதனால் அவர் மிகப்பெரிய தியாகி என்று கதிர்காமுவை புகழ்ந்து, என் மேல் மிகப்பெரிய பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். கதிர்மாமு சட்டமன்ற தேர்தலில் யாரால் வெற்றி பெற்றார் என்று அந்த தொகுதி மக்களூக்கு நன்றாகவே தெரியும்.
இவ்வளவு பொய்யை தினகரன் சொல்லிக்கொண்டிருக்கிறாரே என்று நான் நினைத்துக்கொண்டிருந்தபோது, நான்கு தினங்களுக்கு முன்னதாக, பிஜேபி அரசுடன் கூட்டு சேர்ந்து எடப்பாடி தலைமையிலான அணியை கலைத்துவிட்டு, முதலமைச்சராக வேண்டும் என ஆசைப்படுகிறார் என்று ஒரு உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டை கூறி, தொடர்ந்து என் மீது சேற்றை வாரி வீசிக்கொண்டிருக்கிறார் என்பதை எல்லாம் நான் மனதிலே வைத்துக்கொண்டு இருந்தபோது, நேற்றைய தினம் இப்படி ஒன்றை அவர் பேசியிருக்கிறார்.
தினகரனுக்கு நான் ஒன்றை கூறிக்கொள்கிறேன். நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன். எந்த இயக்கத்தில் நாம் இருக்கிறோமே அந்த இயக்கத்தில் விசுவாசமுள்ள தொண்டனாக கடைசிவரைக்கும் பணியாற்ற வேண்டும் என்று, தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றுதான், நான் என்னுடையை அரசியல் பயணத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறேன்.
நான் மூன்று முறை முதல்வர் ஆகியிருக்கிறேன். அதுவே எனக்கு போதும். எந்த காலத்திலும் நான் குறுக்கு வழியில் முதல்வர் ஆக வேண்டும் நினைக்கவே மாட்டேன்’’ என்று கூறினார்.