Published on 19/09/2019 | Edited on 19/09/2019
தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் அலுவலகத்தில் புகார் ஒன்று கிளம்பியுள்ளது. அது பற்றி விசாரித்த போது, ஓ.பி.எஸ்.சின் பி.ஏ.க்களில் ஒருவரான அருணகிரி, இஷ்டத்துக்கும் கை நீட்டுவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக வீட்டு வசதித் துறை, வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், சி.எம்.டி.ஏ., ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் போன்றவற்றில் ஓ.பி.எஸ்.சுக்குத் தெரியாமல் ஏகத்துக்கும் கரன்ஸி மழையில் விளையாடுவதாக சொல்லப்படுகிறது. இது பற்றி உளவுத்துறை, முதல்வர் எடப்பாடியின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல் எடப்பாடி அலுவலகத்திலும் பரபரப்பு செய்தி உள்ளதாக கூறுகின்றனர்.

அதாவது, முதல்வர் எடப்பாடியின் கட்டுப்பாட்டில் இருக்கும் நெடுஞ்சாலைத் துறை சென்னையில் 9 பாலங்களைக் கட்டப் போவதாக கூறுகின்றனர். இதற்கான திட்ட வரைவைத் தயாரிக்க 2 கோடியே 35 லட்ச ரூபாயை எடப்பாடி அரசு ஒதுக்க போவதாக சொல்லப்படுகிறது. இந்த பாலங்களைக் கட்டும் காண்ட்ராக்ட்டைப் பெற நிறைய கட்டுமான நிறுவனங்கள் இப்போது இருந்தே போட்டியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த காண்ட்ராக்ட் வேலைகளை மீண்டும் செய்யாத் துரையிடம் ஒப்படைப்பதற்கான வேலைகளை ஆளுங்கட்சி தரப்பு செய்து வருகின்றனர். இந்த செய்யாத் துரை தான் முதல்வர் எடப்பாடியின் பினாமி என்ற புகாரோடு வருமான வரித்துறையால் சில மாதங்களுக்கு முன், அதிரடி ரெய்டில் சிக்கினார். பின்பு கணக்கில் காட்டப்படாத 3,500 கோடி ரூபாய் விவகாரத்தில் சிக்கியவர் என்று சொல்லப்படுகிறது.