Skip to main content

சிதம்பரத்தில் காங்கிரஸ் பேரணி; மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவர் பங்கேற்பு

Published on 31/08/2024 | Edited on 31/08/2024
Mahila Congress state president participation Mahila Congress rally in Chidambaram;

சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்டம் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பேரணி இன்று (31-08-24) நடைபெற்றது. சிதம்பரம் காந்திசிலை அருகே நடைபெற்ற இந்த பேரணியை தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவர் சையது அசினா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பேரணி தொடங்கி எஸ்.பி.கோயில்தெரு, போல் நாராயணன் தெரு, மாலைகட்டித்தெரு, உமையாள்சந்து வழியாக  கீழரதவீதியில் உள்ள காமராஜர் சிலையை அடைந்தது. 

அதனை தொடர்ந்து, மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவர் சையதுஅசினா செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது,  ‘ராகுல்காந்தி கொண்டு வந்த திட்டம்தான் பெண்களுக்கு சுயாட்சி அளிக்கும் பஞ்சாயத்துராஜ் திட்டம். இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு 33 இடஒதுக்கீடு கொண்டு வந்தது. தற்போது நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத  இடஒதுக்கீடு குறித்து மசோதாவை நிறைவேற்றியுள்ளனர். ஆனால் அதனை அமல்படுத்தவில்லை. ரூ140 கோடி மக்கள் தொகையில், 70 கோடி பெண்கள் உள்ளனர். அவர்களுக்கு பாதி உரிமையை தருகிறோம் என்கிறார்கள். அந்த உரிமை அரசியல் சாசன சட்டத்தில் உள்ளது. ஆனால் அதனை வழங்கவில்லை. இன்று ராகுல்காந்தி இந்திய அரசியல் சாசனத்தை எடுத்து கொண்டு சாலைகளில் நடக்க தொடங்கியுவுடன், அப்போதே மோடி அரசு பயந்துவிட்டது என்பதுதான் உண்மை.

இந்த நாட்டில் இரு வகையான சாசனங்கள் தற்போது நிலுவையில் உள்ளது. ஒன்று அம்பேத்கர் கொடுத்த உண்மையான அரசியல் சாசனம். மற்றொன்று ஆர்எஸ்எஸ்-ன் சித்தாந்தத்தில் இயங்கி கொண்டிருக்கும் அரசியல் சாசனம். மோடி, நான் தாயின் கருவறையில் இருந்து பிறக்கவில்லை. நான் கடவுள் என்கிறார். 2014-ல் நான் சேவகன் என்றார். 2019-ல் நான் காவலன் என்றார். 2024-ல் தற்போது நான் கடவுள் என்கிறார். 2029-ல் நான் சர்வாதிகாரி என்பார் மோடி. எனவே பெண்களுக்கான 33 இடஒதுக்கீட்டை மோடி உடனடியாக அமல்படுத்த வேண்டும். 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியிருந்தால் பெண்கள் மீதான வன்முறை சம்பவங்கள் நடந்திருக்காது. பல்வேறு மாநிலங்களில் பெண்கள் மீது நடக்கும் வன்கொடுமைகள் குறித்து பா.ஜ.க அரசு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மகிளா காங்கிரஸ் சார்பில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 10 மாவட்டங்கள் முடிவுற்றுள்ளது. அனைத்து மாவட்டங்களில் நடைபயணம் முடிந்த பிறகு குடியரசு தலைவரை சந்தித்து 33 சதவீத இடஒதுக்கீடு கோரி மனு அளிக்க உள்ளோம்” எனத் தெரிவித்தார்

சார்ந்த செய்திகள்