அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஓ.பன்னீர்செல்வம், தங்க தமிழ் மகன் விருதினைத் தொடர்ந்து, இரண்டாவதாக சர்வதேச வளரும் நட்சத்திரம்- ஆசியா விருதும் பெற்றுள்ளார். இன்னும் பல விருதுகள் அவருக்காகக் காத்திருக்கின்றன என்று அவரது விசுவாசிகள் உற்சாகமாக சொல்கின்றனர். இந்த நிலையில் அமெரிக்கா நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஓ.பி.எஸ்., அங்கெல்லாம் தனக்குத் தரப்படும் முக்கியத்துவத்தையும் மரியாதையையும் தன் மகன் ரவீந்திரநாத்துக்கும் தரவேண்டும் என்று நிர்பந்தம் கொடுத்து நிறைவேற்றியதை தெரிந்து கொண்ட எடப்பாடி, எரிச்சலாகியிருக்கிறார் என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.
மேலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்ற துணை முதல்வர் பன்னீர்செல்வம் , அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பர்கர் நிறுவனம் மற்றும் தமிழகத்தில் உள்ள பிரபலமான பிரியாணி கடை இடையே ஒப்பந்தம் ஒன்று ஓபிஎஸ் முன்னிலையில் போட்டதாக சொல்லப்படுகிறது. அதில் இந்தியா முழுக்க இருக்கிற பிரபலமான அந்த பர்கர் கடைகளில் திண்டுக்கல் பிரியாணியும் கிடைக்கும் என்றும் கூறுகின்றனர். இதில் பிரபலமான பிரியாணி கடையில் ஓபிஎஸ்ஸிற்கும் பங்கு இருக்க வாய்ப்பு உள்ளதாக சொல்கின்றனர்.
ஆனால் ஓபிஎஸ் ஷேர் குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் அந்த ஒப்பந்தத்தில் இருப்பதாக இன்னும் செய்திகள் வெளிவரவில்லை என்று தெரிவிக்கின்றனர். மேலும் தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மற்றும் உறைவிட நிதிக்கு ரூ.710 கோடி மதிப்புள்ள முதலீடுகள் திரட்டுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் ‘குளோபல் ஸ்டிரேஜடிக் அலையன்ஸ் இன்க்’ தலைவர் டாக்டர் விஜய் ஜி.பிரபாகர் மற்றும் தமிழ்நாடு நிதித்துறை முதன்மை செயலாளர் ச.கிருஷ்ணன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.