இந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்திஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இது அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நடக்கும் அரையிறுதியாகவே பார்க்கப்படுகிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் 29, ராஜஸ்தானில் 25, தெலுங்கானாவில் 17, சத்திஸ்கரில் 11 மற்றும் மிசோரமில் 1 என மொத்தம் 83 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளதால் இந்த மாநிலத் தேர்தல்கள் மிகவும் முக்கியத்துவம் பெற்றவையாக கருதப்படுகிறது.
“காங்கிரஸ் இல்லாத இந்தியா” என்ற முழக்கத்துடன் 2014-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலை சந்தித்தது பா.ஜ.க.. வரலாற்றில் முதன்முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. நூற்றாண்டு கண்ட இந்தியாவின் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் தன்னுடைய வரலாற்றில் மிக மோசமான ஒரு தோல்வியைத் தழுவியது. 44 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், 282 தொகுதிகளில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்றன.
2015-க்குப் பிறகு 18 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று உள்ளது. இதில் காங்கிரஸ், பஞ்சாப் மற்றும் புதுசேரியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ், கூட்டணி ஆட்சியில் உள்ளது. ஆனால் 11 மாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சியை பிடித்தன. அதே சமயம் 2014-க்குப் பிறகு 30 தொகுதிகளில் நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. இதில் 6 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வென்றுள்ளது. 2014-ல் 16 தொகுதிகளில் வென்று இருந்தது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் 2018-ஆம் ஆண்டு 2 மக்களவைக்கு தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைதேர்தலில் அல்வார் தொகுதியில் 1,96,496 வாக்குகள் வித்தியாசத்திலும், அஜ்மீர் தொகுதியில் 84,414 வாக்குகள் வித்தியாசத்திலும் காங்கிரஸ் கட்சி வென்றது. இந்த தொகுதிகளில் 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. முறையே 2.84, 1.72 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது. மேலும் இங்கு அப்போது நடந்த சட்டமன்ற இடைதேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. சச்சின் பைலட் தலைமையின் கீழ், காங்கிரஸ் ராஜஸ்தானில் உள்ளாட்சி தேர்தலில்களில் பெரும்பான்மை இடங்களை வென்றுள்ளது. இது ஆளும் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க.வுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற ரத்லம் தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் 88,832 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதே தொகுதியில் 2014-ஆம் ஆண்டு பா.ஜ.க. 1,08,457 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று இருந்தது. 2016-ஆம் ஆண்டு ஷஹ்டோல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. 60,383 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது. இதே தொகுதியில் 2014-ஆம் ஆண்டு பா.ஜ.க. 2,41,301 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 2018-ல் இந்த மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி இடைதேர்தல்களில் காங்கிரஸ் பெரும் வெற்றியை பெற்றுள்ளது. 2 சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலில், ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் கமல்நாத் தலைமையில் சந்தித்த காங்கிரஸ் வெற்றிபெற்றது. பா.ஜ.க.-ன் இந்தத் தோல்வி 13 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள சிவராஜ் சிங் சௌஹான் அரசிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தற்போது ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. இரு மாநிலங்களிலும் ஆளும் கட்சிகளை சேர்ந்த முக்கிய கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து வருகின்றனர். இரு மாநிலங்களிலும் ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தவரை காங்கிரஸ் எளிதாக வெற்றி பெரும் வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால் மத்திய பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு உள்ள போதிலும், உட்கட்சி பிரச்சனை காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக இருக்கும்.
சத்திஸ்கரில் ஆளும் ரமன் சிங் தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு எதிராக மனநிலை இருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கு உட்கட்சி பிரச்சனைகள், அஜீத் ஜோகியின் தனிக்கட்சி என பல காரணிகள் சவாலாக உள்ளது. அதனால் இங்கு போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
தெலுங்கானா மாநிலத்தில் சந்திர சேகர் ராவ்வின் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு அதிருப்தி நிலவுகிறது. இருப்பினும் பெரிய எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மிகவும் வலுமையான எதிர்க்கட்சி இல்லாத காரணத்தால் எளிதாக வெற்றி பெறலாம் என எண்ணி முன்கூட்டியே சட்டசபையை கலைத்தார் சந்திர சேகர் ராவ். ஆனால் எதிர்பாராத விதமாக காங்கிரஸ், தெலுங்கு தேசம் மற்றும் சில கட்சிகள் பெரிய வலுவான கூட்டணியை அமைத்துள்ளன. இது ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு பெரும் சவாலாக உள்ளது. முதலில் ராஷ்ட்ரிய சமிதி கட்சி எளிதாக வென்று விடும் என கருதப்பட்டது. தற்போதுள்ள நிலையில் வலுவான கூட்டணி காரணமாக வெற்றியின் அலை மாற தொடங்கியுள்ளது.
40 தொகுதிகளை மட்டுமே கொண்டுள்ள மிசாரம் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் வெற்றிபெறுவது எளிதல்ல. இங்கு 2 மாநில கட்சிகள் மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி கடுமையாக உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியே அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும்.
2019-ஆம் ஆண்டு மக்களைவை தேர்தலுக்கு முன்னதாக இந்த 5 மாநிலங்களில் நடக்க இருக்கும் தேர்தல் ஒரு முன்னோட்ட பொதுத்தேர்தல்களாக பார்க்கப்படுகிறது. இன்று இருக்கும் சூழ்நிலைகளைப் பார்த்தால் இந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி பெரும் புத்துணர்ச்சி பெற்று வருகிறது. அதே சமயம் பல மாநிலங்களில் வெற்றி பெற்று வரும் பா.ஜ.க. இந்த பெரிய முக்கியமான மாநிலங்களில் செல்வாக்கை இழந்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற பெரும்பாலான சட்டமன்ற தேர்தல்களில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் திட்டங்கள் வெற்றி பெற்று வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது. இந்த மாநிலத் தேர்தல் முடிவுகள் பொதுத் தேர்தலின் திசையை தீர்மானிக்கும் என்பது யதார்த்தம்.