பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டில், அருந்ததி சமூக மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, பட்டியல் சமூக மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு இருக்கிறது என்று தீர்ப்பளித்தது. அதோடு, பட்டியல் மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் நடைமுறையை அமல்படுத்துவது அவசியம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். இதனை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதற்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன், திருமாவளவனை விமர்சனம் செய்திருந்தார். இது தொடர்பாக அவர் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது, “சமூக நீதி பற்றிப் பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது. சமூக நீதி பற்றி அம்பேத்கர் கூறியது என்னவென்றால் அணைத்து கடைக்கோடி மக்களுக்கும் இட ஒதுக்கீடு சென்று சேர வேண்டும் என்பது தான் அம்பேத்கரின் எண்ணமாகவும், கொள்கையாகவும் இருந்தது. ஆனால் திருமாவளவன் இரட்டை வேடம் போடுகிறார். அருந்ததியர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த திருமாவளவன் எப்படி தலித் மக்களின் தலைவராக இருக்க முடியும்?. இவர் எப்படி ஒட்டுமொத்த தமிழகத்தின் தலைவராக இருக்க முடியும்? அவரது கட்சி ஒரு சிறியது. அவரை அந்த அமைப்புக்கான தலைவராகத் தான் நான் பார்க்கிறேன்.
அவர் ஒட்டுமொத்த தலித் மக்களின் தலைவர் என்றால் அவர் அனைத்து தலித் மக்களையும் திருமாவளவன் ஓரே பார்வையில் பார்க்க வேண்டும். எனவே அவரின் உண்மை முகம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. கடைக்கோடியில் உள்ள அனைத்து தலித் மக்களுக்கும் இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்பதுதான் அம்பேத்கரின் எண்ணம். அதுதான் அவரின் கோரிக்கை. அதற்காகத்தான் அவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார். ஆனால் அந்த இட ஒதுக்கீட்டை நீர்த்துப்போகச் செய்கின்ற அளவிற்குச் செய்து கொண்டிருப்பது தான் திருமாவளவன்” எனத் தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசிய இந்த கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் வன்னியரசு கண்டனம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “எல்.முருகன் அருந்ததியர் என்பதையே ஆர்.எஸ்.எஸ் சொல்லித்தான் அருந்ததியர் சமூகத்திற்கே தெரியும். அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர். அருந்ததியர் மக்களின் உரிமைகளுக்காக எந்த இடத்திலும், எந்த நாளிலும் அவர் போராடியது இல்லை. அதற்காக அவர் குரல் கொடுத்தது இல்லை. அவர் படிக்கும் காலத்திலே ஆர்.எஸ்.எஸ். தொண்டராக இருந்தார். அரசியலில் ஈடுபடும் காலத்திலே ஆர்.எஸ்.எஸ்காரராக ஈடுபட்டார். பா.ஜ.கவும், ஆர்.எஸ்.எஸும் தான் இவர் ஒரு அருந்ததியர் என்று அடையாளம் காட்டியது. தமிழ்நாட்டில் உள்ள அருந்ததியர்களுக்கும், எல்.முருகனுக்கு எந்த தொடர்பு இல்லை” என்று கூறினார்.