இலங்கையில் நிகழும் தொடர் அரசியல் மாற்றங்கள், ஈழத்தமிழர் மத்தியிலும் தமிழர்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியிடம் பேசினோம். அவருடனான நீண்ட உரையாடலில் இருந்து ஒரு பகுதி.
"ராஜபக்சே, சிறிசேன, ரணில் மற்றும் மோடி அனைவருமே ஒரு பொம்மைதான் இவர்களெல்லாம் மிகப்பெரும் தலைவர்களாக நம்மிடம் சீன் காட்டுகிறார்கள். ஆனால் இவர்கள் எல்லாம் பொம்மைகள்தான், அமெரிக்கா மோடியை அழவேண்டும் என்று சொன்னால் மோடி அழுவார். சிரிக்க வேண்டும் என்று சொன்னால் மோடி சிரிப்பார்.
இலங்கையில் ராஜபக்சேவை ஆட்சிக்கு கொண்டுவரும் உடன்படிக்கையில் சீனாவுடன் இந்தியா ரகசிய உடன்பாட்டில் இருக்கின்றது. அதில் மாற்று கருத்தே இல்லை. ஏனென்றால் சீனாவுடன் பெரும் பொருளாதார உறவை இந்தியா வைத்திருக்கிறது. அதை எளிதில் முறித்துக்கொள்ளமுடியாது. அதேபோல் அமெரிக்காவுடன் ராணுவம் மற்றும் வர்த்தக உறவு இருக்கிறது. அதையும் முறித்துக்கொள்ளமுடியாது. அதனால்தான் ராஜபக்சே போன்ற கொடூரமான ஆட்சியாளர்களை மீண்டும் கொண்டு வருகிறார்கள். பாபர் மசூதியை இடித்துவிட்டு அங்கு ராமர் கோயில் கட்டுவேன் என்று சொல்லும் பாஜக. அதற்கென்று தனிசிறப்பு சட்டம் கொண்டு வருவேன் என்று சொல்லும் காவி கும்பல், ஈழத்தில் கோவில்களையெல்லாம் இடித்த ராஜபக்சேவை வரவேற்பதை எப்படி புரிந்து கொள்வது. ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்கும் முன் சுப்பிரமணியசாமிதான் டெல்லிக்கு அழைத்து விருந்து வைத்தார். இதிலிருந்து என்ன தெரிகிறது தமிழர்கள் இந்துக்கள் இல்லை."