டிசம்பர் 12ஆம் தேதி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரியில் தேசிய இளையோர் தின விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான், கொரானோ வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மோடி பங்கேற்கும் இந்தத் தேசிய இளைஞர் தின விழாவுக்கு புதுச்சேரி அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "நாட்டில் கரோனா ஒன்று மற்றும் இரண்டாவது அலையில் லட்சக் கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக இறந்தார்கள். அப்போது அவர்களை காப்பாற்ற மோடி தலைமையிலான அரசு ஒன்றும் செய்யவில்லை. இந்த சூழ்நிலையில் உருமாறிய வைரஸாக ஒமிக்ரான் வைரஸ் வேகமாக நாட்டில் பரவி வருகிறது. மூன்று மடங்கு வேகமாகப் பரவக் கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், புதுச்சேரியில் இளைஞர் திருவிழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள இந்த சூழ்நிலையில் இந்த விழா தேவைதானா? இந்த விழாவில் கலந்து கொள்ளும் முடிவை பிரதமர் மோடி மறு பரிசீலனை செய்ய வேண்டும். மேலும் பிரதமர் வருவதை கவர்னர் அறிவிக்கிறார். முதல்வருடன் பேசி கலந்து தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை!? இளைஞர் திருவிழா புதுச்சேரியில் நடைபெற்றால் வெளிமாநிலங்களில் இருந்து 8,000 இளைஞர்கள் வரக்கூடும். இவர்களால் தொற்றும் அதிகரிக்கும். எனவே இளைஞர் திருவிழாவை புதுச்சேரியில் நடத்துக்கூடாது" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க மாநில அமைப்பாளருமான இரா.சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா, ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்து வருகின்றனர். அதனை மீறி புத்தாண்டு கொண்டாட்டம் நடத்தப்பட்டது. இதனால் தற்போது புதுச்சேரியில் கரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் தேசிய இளையோர் தின விழா வரும் 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை நடத்த தீவிரமாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கரோனா தொற்று அதிகமுள்ள வடமாநிலங்களில் இருந்து நிறைய இளைஞர்கள் புதுச்சேரிக்கு வர ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதனால் புதுச்சேரி மீண்டும் கடும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும். புதுச்சேரியின் பொருளாதாரம் முற்றிலும் படுத்துவிடும். விழா நடத்தி தொற்றை பரப்பிவிட்டு வீடுகளில் மக்களை முடக்க வேண்டிய நிலையும் ஏற்படும். தேசிய இளைஞர் விழா என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்.ஐ. வளர்க்க மத்தியில் ஆளும் பா.ஜ.க. முயற்சித்து வருகிறது. இதற்கு புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் அரசு துணை போகக்கூடாது. எனவே தேசிய இளைஞர் விழாவை புதுச்சேரியில் நடத்துவதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும். மேலும் இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதையும் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் தேசிய இளைஞர் விழா எங்கெங்கெல்லாம் புதுச்சேரியில் கொண்டாடப்பட உள்ளதோ அங்கெல்லாம் போராட்டங்களை முன்னெடுப்போம்" என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கோ.சுகுமாரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில அமைப்பாளர் சி.ஸ்ரீதர், புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சி.சு.சுவாமிநாதன் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் தேசிய இளைஞர் தின விழா நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.