வேலூர் மேற்கு மாவட்டம் ( திருப்பத்தூர் மாவட்டம் ) வாணியம்பாடியின் திமுக நகர பொறுப்பாளராக கடந்த நான்கு ஆண்டுகளாக இருந்தவர் சாரதிகுமார். இவரது தந்தை சிவாஜிகணேசன் நீண்ட ஆண்டுகாலம் கட்சியில் ந.செ வாக இருந்ததால் அவரது திடீர் மரணத்தால் இளம் வயதிலேயே நகர நிர்வாகிகளின் வற்புறுத்தால் சாரதிகுமாருக்கு நகர பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்த பகுதி இந்த வாணியம்பாடி தொகுதி என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் திமுக நகர பொறுப்பாளர் சாரதிகுமார் மீது அவரது மனைவி ரம்யா, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் தந்தார். அதில் எனது கணவருக்கு வேறு இரண்டு பெண்களுடன் தொடர்புவைத்துக்கொண்டு என்னை அடித்து உதைத்து சித்தரவதை செய்கிறார். எங்கள் குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார் எனவும், இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை அறிவாலயத்தில் சந்தித்து புகார் தெரிவித்துள்ளதாகவும், அறிவாலயத்துக்கு வெளியே என்னை மிரட்டி என் கழுத்தில் இருந்த செயினை பறித்து சென்றார் என புகார் தந்து அதனை செய்தியாளர்களிடமும் கூறினார்.
சாரதிகுமார் மீது அவரது மனைவி புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சாரதிகுமார் மீது கூறிய புகாரினை திமுக தலைமை விசாரணை நடத்தியது. விசாரணையில் அந்த சாரதிகுமாரின் மனைவி கூறியது உண்மையென தெரியவந்தது. அதேநேரத்தில் இது அவரது குடும்ப பிரச்சனை இதனை அவர் சட்டரீதியாக தீர்த்துக்கொள்ளட்டும் என்றும் சில கருத்துக்களை நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
அதேநேரத்தில் திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் குறித்து பேசியதோடு, அவருடன் இணைத்து பேசப்படும் பெண்ணுடன் செல்போனில் பேசிய ஆடியோக்களும் திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு சென்றுள்ளது. அதனைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சியாகியுள்ளார்கள். அதன்பின்பே, சாரதிகுமாரை அழைத்து ராஜினாமா கடிதம் வாங்கியுள்ளார்கள் தலைமை கழக நிர்வாகிகள்.
அந்த ராஜினாமா கடிதத்தை ஏற்று சாரதிகுமாரை, வாணியம்பாடி நகர பொறுப்பாளர் பதவியில் இருந்து விடுவிடுவித்துள்ளது திமுக தலைமை. இதுப்பற்றிய அறிவிப்பு கட்சியின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியில் வெளிவந்துள்ளது. இதனைப்பார்த்து சாரதிகுமாரின் ஆதரவாளர்கள் வாணியம்பாடியில் தலைமை எதிராக திரண்டுள்ளனர். நாங்கள் கட்சியில் இருந்து விலகுகிறோம் என தகவல் அனுப்பியுள்ளனர் எனக்கூறப்படுகிறது. இது வேலூர் மேற்கு மாவட்ட திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.