அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. அதே சமயம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார்.
இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி (19.04.2024) நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ. பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பாக ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார். இந்நிலையில் மதுரையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “அதிமுகவில் ஓபிஎஸ் இணைவதாக வரும் தகவலில் துளியும் உண்மையில்லை. உச்சபட்ச பாவச் செயலாக இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக ஒற்றை தொகுதிக்காக சுயேச்சையாக ராமநாதபுரத்தில் போட்டியிட்டது எந்த வகையில் நியாயம். இது போன்று தொடர்ந்து கட்சிக்கு அவர் எத்தனை பாவச் செயல்களை செய்வோரா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். ஓ. பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளால் அதிமுக பின்னோக்கி சென்றது. தனக்குப் பதவி இல்லை என்பதால் அதிமுகவை பிரிக்க திட்டமிட்டார். கட்சியின் முக்கியத்துவம் மற்றும் நலன் கருதி ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைக்கப்பட்டார். ஆனால் அவர் அதிமுகவின் முக்கிய முடிவுகளில் மறுப்பு தெரிவிப்பார் அல்லது மௌனம் காப்பார்.
கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ரவீந்திரநாத் தேனியில் வெற்றி பெற்றது அதிமுகவின் வெற்றி. அது ஓ. பன்னீர்செல்வத்தின் வெற்றி அல்ல. பதவி பறிபோகிறது என்பதால் கட்சி பிரிவுக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டது ஓ. பன்னீர்செல்வம் தான். அதிமுக தனது வரலாற்றில் அதிக அளவில் வழக்குகளை சந்தித்ததில்லை. ஆனால் அதிமுக ஏராளமான வழக்குகளை சந்திக்க வைத்தவர் ஓ.பன்னீர் செல்வம். இவர் தனது சுய லாபத்துக்காகவும் பதவிக்காகவும் அதிமுக மீது பல்வேறு வழக்குகளை தாக்கல் செய்தார்” எனப் பேசினார்.