
வேலூர் மாநகராட்சியில் 4 மண்டலங்கள், 60 வார்டுகள் உள்ளன. இதில் முதல் மண்டலத்துக்கு உட்பட்ட 7வது வார்டு வேட்பாளர்களாக திமுகவில் புஷ்பலதா வன்னியராஜா, அதிமுக, பாமக, பாஜக, அமமுக என 6 பேர் வேட்பாளர்களாக மனு செய்திருந்தனர்.
பிப்ரவரி 6ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை முடிந்து அனைவரின் வேட்புமனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிப்ரவரி 7 ஆம் தேதி காலை மண்டல அதிகாரியிடம் சென்ற அதிமுக வேட்பாளர் தனலட்சுமி, பாஜக வேட்பாளர் கௌதமி, பாமக வேட்பாளர் சுதா, அமமுக காயத்ரி போன்றோர் தாங்கள் போட்டியில் இருந்து விலகுவதாக மனுவை தந்தனர். இதனால் திமுக வேட்பாளர் புஷ்பலதா போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இந்த தகவல் எதிர்கட்சி நிர்வாகிகள் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அதேபோல் முதல் மண்டத்தில் 8வது வார்டு முன்னாள் கவுன்சிலரும், மண்டல தலைவராக இருந்த திமுக வேட்பாளர் சுனில்குமார் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். சுனில்குமார் வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமார், பாமக - ராமச்சந்திரன், பாஜக - தியாகராஜன் உட்பட 5 பேரின் மனுவும் சரியாக பூர்த்தி செய்யாததால் இவர்களது மனு தேர்தல் அலுவலரால் தள்ளுபடி செய்யப்பட்டது. மாற்று வேட்பாளர்களின் மனுவும் தவறாக இருந்ததால் அவர்களது மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் போட்டிக்கு ஆள் இல்லாததால் திமுக வேட்பாளர் சுனில்குமார் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
தேர்தலுக்கு முன்பாகவே வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டில் திமுக இரண்டு வார்டில் வெற்றிப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.