ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.
இருப்பினும் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 39 இடங்களையும் வென்றது. புதுச்சேரியின் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. அதே சமயம் தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ. பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பாக ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சையாக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் ராமநாதபுரம் நாடாளுமன்ற மக்களவை தொகுதியின் தேர்தல் முடிவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் பிரிந்து கிடக்கும் அதிமுக இணைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனை நானும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறேன்.
அதிமுக பிளவுபட்டு உள்ளது தமிழகத்தில் உள்ள ஜனநாயக சக்திகளுக்கு எதிரானது. அதிமுகவில் எங்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்று எடப்பாடி பழனிசாமியிடம் யார் சொன்னது. அவராகவே கேள்விக் கேட்டுக் கொண்டு, அவராகவே பதில் சொல்வது நல்லதல்ல. சசிகலா பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்.” எனத் தெரிவித்தார். ராமநாதபுரம் தொகுதியில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி 5 லட்சத்து 9 ஆயிரத்து 664 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.