ஈரோடு இடைத்தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதேநேரம் அதிமுக சார்பில் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் இருவரும் தனித்தனி வேட்பாளரை களமிறக்கினர். ஆனால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் என்பதால் ஓ.பி.எஸ் அணி சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர் வாபஸ் பெறப்பட்டு இ.பி.எஸ் நிறுத்திய வேட்பாளர் அதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார் என உறுதி செய்யப்பட்டது.
இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலைக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்வோம்., ஆனால் இ.பி.எஸ் நிறுத்திய வேட்பாளர் தென்னரசு பெயரை சொல்லி வாக்கு சேகரிக்கமாட்டோம் என ஓ.பி.எஸ் அணியின் கு.பா. கிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இதனிடையே அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து ஆர்.பி உதயகுமார் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் என கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இடைத்தேர்தல் குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் வரும் 20 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளார். சென்னை எக்மோரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்யலாமா அல்லது வேணாமா என்று ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் அதிமுகவில் தனக்கான செல்வாக்கை அதிகப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.