இந்தியாவில் நடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய இரண்டு மாநிலங்களில் அதன் மாநிலக் கட்சிகள் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், அசாம் மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது.
தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. திமுகவின் வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினரும், பிரபலங்களும் திமுகவிற்கும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது ட்விட்டர் பக்கத்தில், “மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். மக்கள் நலனுக்காக மாநில அரசுகள் மத்திய அரசுடன் தோளோடு தோளாக பணியாற்றும் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து பதில் அளித்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வாழ்த்துக்கு நன்றி. மக்களின் நலன்களை முன்னேற்றவும், நமது கூட்டாட்சி கடமைகளை நிறைவேற்றவும் தமிழ்நாடு, ஒன்றிய அரசுடன் துணை நிற்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
அமித் ஷாவின் ‘மத்திய அரசு’ எனும் வார்த்தையையும், மு.க. ஸ்டாலின் தன் பதிலில் குறிப்பிட்டிருக்கும் ‘கூட்டாட்சி மற்றும் ஒன்றிய அரசு’ எனும் வார்த்தைகளையும் குறிப்பிட்டு, மாநில சுயாட்சியை திமுக எப்போதும் விட்டுத்தராது என்பதையே இது உணர்த்துகிறது என சமூக வலைதளங்களில் அக்கட்சியினர் கருத்து தெரிவித்துவருகின்றனர்.