அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23ம் தேதி கூடவிருக்கிறது. இதன் காரணமாக நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் மா.செக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அலுவலகத்தின் வெளியே இருந்த தொண்டர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். அதில் சிலர் ஓ.பி.எஸ். தலைமையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் கூட்டம் முடிந்து வெளியே வந்த அதிமுக செய்தித்தொடர்பாளர் ஜெயக்குமார் ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்துப் பேசப்பட்டதாகத் தெரிவித்தார்.
இது அதிமுக அரசியலில் இன்னும் பரபரப்பைக் கூட்டியது. அதேபோல், நேற்று இரவு திடீரென ஓ.பி.எஸ் முன்னாள் அமைச்சர்கள் சிலருடன் தனது வீட்டில் ஆலோசனை நடத்தினர். மேலும், இன்று காலை ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ். இருவரும் தனித்தனியே அவர்கள் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். அப்படி ஈ.பி.எஸ் வீட்டில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார், மாவட்டச் செயலாளர்கள் விருகை.ரவி, ஆர்.எஸ். ராஜேஷ், வெங்கடேஷ் பாபு, தி. நகர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் 23ம் தேதி கூடவிருக்கும் அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அண்மையில், வேலை வாங்கி தருவதாக முறைகேடு செய்ததான புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு, வழக்கு விசாரணை நடைபெறும் காவல் எல்லையை விட்டு வெளியே செல்லக்கூடாது என உச்சநீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்நிலையில் 23ம் தேதி சென்னையில் கூடவிருக்கும் அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கவும், அப்படியே சென்னையில் தங்கி ஐந்து நாட்கள் சிகிச்சை பெறவும் ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த கோடைகால சிறப்பு அமர்வு நீதிபதிகள் 'கட்சியின் பொதுக்குழுவில் கலந்து கொள்ளவில்லை என்றால் ஒன்றும் ஆகிவிடாது' என்று கூறி அவரது கோரிக்கையைத் தள்ளுபடி செய்தனர்.