சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் பேசியதாவது, “அவர்களிடம் இரட்டை இலையும் கட்சியின் பெயரும் இருப்பதால்தான் தொண்டர்கள் ஜெயலலிதாவின் கட்சி என்று இருக்கிறார்கள். ஒருவேளை நீதிமன்ற தீர்ப்பு அவர்களுக்கு வந்தாலும் இந்த இரட்டை இலை சின்னத்தை வைத்துக்கொண்டு அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. அந்த அளவிற்கு அந்த கட்சியை பலவீனப்படுத்தியுள்ளனர்.
உண்மையான ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைந்தால் நன்றாக இருக்கும் என சொன்னேன். அவ்வாறு இல்லை என்றாலும் அதுகுறித்து கவலைப்படப்போவதில்லை. ஓ.பன்னீர்செல்வத்தை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன். எப்பொழுது வாய்ப்பு கிடைத்தாலும் ஓபிஎஸ்-ஐ சந்திப்பேன்.
இன்றைய நிலைமையில் இரட்டை இலை சின்னம் உறைந்த நிலைமையில்தான் உள்ளது. நீதிமன்றத் தீர்ப்பிற்கு முன் இடைத்தேர்தல் வந்தால் அதில் யார் கையெழுத்துப் போடுவார். அதன்படி பார்த்தால் சின்னம் உறைந்து போய் தானே உள்ளது. நீதிமன்றம் நாளையே இந்த வழக்கை நடத்த வேண்டும் என்று இல்லை. இது ஒன்றும் நாட்டுக்கு அவ்வளவு முக்கியமான வழக்கும் இல்லை. நீதிமன்றத்தின் மூலம் தீர்வு கிடைத்தாலும் தேர்தல் ஆணையம் அதை எப்படிப் பார்க்கிறது என்பது இருக்கிறது.” எனக் கூறினார்.