சட்டமன்றத்துக்கான பொதுத் தேர்தல் வரும்போதெல்லாம், ஜாதி ரீதியிலான பிரதிநிதித்துவமும், தங்களுக்கான அரசியல் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என, அந்தந்த சமுதாய அமைப்புகள், பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வது வழக்கம்.
தமிழகத்தில், சேலம், நாமக்கல், ஈரோடு, மதுரை, கரூர், திருச்சி, கோயம்புத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் வேட்டுவக் கவுண்டர் சமுதாய மக்கள் வசிக்கின்றனர். கடந்த ஜனவரியில், கொங்கு கவுண்டர்களின் 4-வது மாநில மாநாட்டினை, புதிய திராவிட கழகத்தின் தலைவர் கே.எஸ்.ராஜ்கவுண்டர், கொங்குநாடு வேட்டுவக் கவுண்டர் இளைஞர் நலச்சங்கத்துடன் இணைந்து, பெரிய அளவில் செலவழித்து நடத்தினார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த இக்கட்சி, சீட் எதிர்பார்ப்போடு, அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், கருப்பண்ணன் ஆகியோரை, அந்த மாநாட்டு மேடையில் ஏற்றி, சில கோரிக்கைகளை முன்வைத்தது. அந்த நேரத்தில் வாக்குறுதி கொடுத்த அமைச்சர்கள் தற்போது பின்வாங்கி, ‘நோ சீட்’ என்று கைவிரித்துவிட்ட நிலையில், செந்தில்பாலாஜி ரூட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ராஜ்கவுண்டர் சந்தித்து ஆதரவு தெரிவித்ததோடு, திண்டுக்கல் சென்று ஐ.பெரியசாமி, அவருடைய மகன் ஐ.பி.செந்தில் போன்றோருக்கும் சால்வை அணிவித்துள்ளார்.
‘அதிமுக அமைச்சரவையில் இத்தனை கவுண்டர்கள் இருந்தும், வேட்டுவக் கவுண்டருக்கு இடமில்லையே என்ற ஏக்கத்தை, வாக்களிக்கும்போது இச்சமூகம் நிச்சயமாகப் பிரதிபலிக்கும். அந்த அமைச்சர்களாலும் வஞ்சிக்கப்பட்டோம். கொங்கு மண்டலத்தில் ஆளும்கட்சியைச் சேர்ந்த ஒரு கவுண்டர் வேட்பாளர் தோற்றாலும், அதற்கு காரணமானவர்களாக வேட்டுவக் கவுண்டர்களே இருப்பார்கள்..’ என்று அடித்துச் சொல்கிறார்கள்.
மொத்தத்தில், ‘கவுண்டர்’ அமைச்சர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது, வேட்டுவக் கவுண்டர் சமுதாய வாக்குகள்!