எஸ்.பி.வேலுமணி வீடு, அவரது உதவியாளர் சந்தோஷின் வீடு, எஸ்.பி.வேலுமணி சகோதரர் அன்பரசன் வீடு, கடை, அலுவலகம் உட்பட தமிழகம் முழுவதும் ஆறு மாவட்டங்களில் 59 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவரும் நிலையில், இந்த சோதனையில் 11.53 கிலோ தங்கம், 118.506 கிலோ வெள்ளி மற்றும் கணக்கில் வராத 84 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் செல்போன்கள், வங்கியின் லாக்கர் சாவிகள், மடிக்கணினி, கணினி ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
34 லட்ச ரூபாய்க்கு கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடத்தில் செய்யப்பட்ட சோதனையில் அவர் கிரிப்டோ கரென்சியில் முதலீடு செய்திருப்பது தெரியவந்திருந்த நிலையில் எஸ்.பி.வேலுமணியும் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று மாலை அவரது வீட்டில் நடைபெற்ற சோதனை முடிந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்தார் வேலுமணி. அப்பொழுது முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது பேசிய வேலுமணி, ''முதல்வர் ஸ்டாலின் முழுமையாக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மீண்டும் என்னுடைய வீடு, என்னுடைய சகோதரர் வீடு, அதேபோல எனக்கு சம்பந்தம் இல்லாத எம்.எல்.ஏக்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இப்படி திமுகவை யார் எதிர்த்து கடுமையாக தேர்தல் வேலை பார்த்தார்களோ, யார் முதலமைச்சரை அரசியல்ரீதியாக எதிர்க்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் இன்னைக்கு ரெய்டு நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும். இரண்டாவது முறையாக இன்று அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முழுமையாக முதலமைச்சர் என்னுடைய வீட்டை ரெய்டு பண்ணி இருக்காங்க. என் வீட்டில் போனதடவ பண்ணும் போதும் எதுவுமே கைப்பற்றப்படவில்லை. இன்றைக்கும் சில ஊடகங்கள் தவிர சில செய்திகள் தவறாக போட்டிருக்கிறீர்கள். தங்கத்தை பிடித்துள்ளார்கள், பணத்தை பிடித்துள்ளார்கள் என்பதெல்லாம் உண்மை இல்லை. என் வீட்டில் இன்றைக்கும் ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை. எல்லாவற்றையும் முழுமையாக பார்த்துவிட்டு கையெழுத்துப் போட்டுகொடுத்து விட்டுப் போயிருக்கிறார்கள். எதுவுமே உண்மை இல்லை. இந்த சோதனையைச் சட்டரீதியாக நாங்கள் சந்திப்போம். முதல்வரை பொருத்தவரை எங்களது வீட்டில் ரெய்டு செய்து எங்களுடைய வேலைகளை முடக்க வேண்டும் என்று நினைக்கிறார். அது எந்த காலத்திலும் நடக்காது'' என்றார்.