தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகளும் பின்னர் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி 156 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 77 சட்டமன்றத் தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.
இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கசாலியை விட 68,133 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் திருவண்ணாமலையில் திமுக சார்பில் போட்டியிட்ட ஏ.வ.வேலு 1,38,066 வாக்குகள் பெற்று 94,926 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.