மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது வருகிற பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் திண்டுக்கல்லில் உள்ள சிலப்பாடி அருகே ரூ. 18.70 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அரசு ஆரம்பப் பள்ளி கட்டடத்தை முன்னாள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திறந்து வைத்தார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சென்னையில் மத்திய மந்திரி அமித் ஷா பாஜக நிர்வாகிகள் மத்தியில் பேசும்போது, தொண்டர்கள் உற்சாகமாக கட்சி பணியாற்ற வேண்டுமென்ற நோக்கத்தில் 25 தொகுதிகளில் வெற்றி பெற உழைக்க வேண்டுமென பேசி உள்ளார். ஆனால் அதிமுகவை பொறுத்தவரை தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்தியாவில் பாஜக தலைமை வைக்கிறது. ஆனால், தமிழகத்தில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி. இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்பு எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்து பேசி இறுதி முடிவு எடுக்க கட்சி நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள். அதுவரை எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பதை உறுதியாக சொல்ல முடியாது” என்று கூறினார்.
இந்நிகழ்வில் திண்டுக்கல் மாமன்ற அதிமுக எதிர்க்கட்சி உறுப்பினர் ராஜ்மோகன், திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் ராஜசேகர், அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதி முருகன் உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.