சென்னை, மேற்கு மாம்பலத்திலுள்ள கோசாலையில் கடந்த 15ஆம் தேதி (15.01.2025) அன்று மாட்டுப்பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கோமியம் குறித்து அவர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, “கோமியம் சிறந்த மருத்துவ குணத்தைக் கொண்டது. காய்ச்சலைக் குணமாக்கும். பாக்டீரியா பாதிப்பு, பூஞ்சை பாதிப்புகளுக்கு எதிராகக் கோமியம் செயல்படக் கூடியது. மேலும் இது, செரிமான கோளாறு உள்ளிட்ட உடல் பாதிப்புகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது” எனப் பேசியிருந்தார்.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடியின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி நேற்று (20.01.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கோமியம் குறித்து பேசியது தொடர்பாக விளக்கமளித்திருந்தார். அதில், “கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதற்கான 5 ஆராய்ச்சி கட்டுரைகள் மற்றும் ஒரு காப்புரிமை தொடர்பான அறிக்கை என்னிடம் உள்ளது.
பண்டிகையின் போது நான் பஞ்சகவ்யம் உண்பதை வழக்கமாக கொண்டுள்ளேன். பஞ்சகவ்யத்தில் மருத்துவ குணங்கள் உள்ளது என்பதற்கான ஆறிவியல் பூர்வமான ஆதாரம் என்னிடம் உள்ளது. அமெரிக்காவில் வெளியான இதழ்களில் பஞ்சகவ்யத்தில் எதிர்ப்புச் சக்தி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கோமியம் தொடர்பாகச் சென்னை ஐ.ஐ.டி.யில் ஆராய்ச்சி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். கோமியத்தைக் குடித்தால் உடல் நலப் பாதிப்பு ஏற்படும் என வெளிவந்துள்ள ஆராய்ச்சி குறித்து நான் படிக்கவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இத்தகைய சூழலில் தான் தமிழக பா.ஜ.க.வின் மூன்னாள் தலைவரும், தெலங்கானாவின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று (21.01.2025) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “ஆராய்ச்சி பூர்வமாக, விஞ்ஞான பூர்வமாக கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். அதனால் தான், வீட்டிற்கு முன்பு அதனைத் தெளிப்பார்கள். 80 வகையான நோய்களை குணப்படுத்தப்படுவதால் ஆயுர்வேதத்தில் அதனை மருந்து என்றும் சொல்லியிருக்கிறார்கள்” எனப் பேசியிருந்தார்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை சௌந்தரராஜனுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை. ஆயுர்வேதத்தில் இருக்கிறது என்பதால், கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் நம்ப வேண்டுமா?. மாட்டின் கழிவு நீரான சிறுநீரை அமிர்தநீர் என்று பாஜகவில் உள்ளவர்களால்தான் சொல்லமுடியும். இவர்கள் இவ்வாறு சொல்லாவிட்டால்தான் அதிசயம். இதுபோன்ற அமிர்தநீர் ஆராய்ச்சி கொண்ட கருத்துகளை இவர்கள் வெளிநாடுகள் செல்லும் போது சொல்லமுடியுமா?. வடநாடுகளில், மாட்டை வைத்து, கலவரம் செய்து அரசியல் ஆதாயம் தேடியது போல இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.