மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திங்கள்கிழமை பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி,
மு.க.ஸ்டாலின் மதுரையில் பிரசாரம் செய்த போது பல்வேறு கருத்துகளை சொல்லி விட்டு சென்றுள்ளார். ஜெயலலிதா உடல் நலம் குன்றி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த காலக்கட்டத்தில் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக டாக்டர்களை அரசு நியமித்து இருந்தது. அவரை கண்காணிக்கும் மருத்துவக்குழுவின் அதிகாரியாக தமிழக அரசு மூலம் டாக்டர் பாலாஜி நியமிக்கப்பட்டார்.
கடந்த 2016-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் போட்டியிட, டாக்டர் பாலாஜி முன்னிலையில் ஜெயலலிதாவிடம் படிவத்தில் கை ரேகை பதிவு செய்து தேர்தல் அதிகாரியிடம் கொடுக்கப்பட்டது. அது தான் குற்றம் என்று சொல்லி இருக்கிறார்கள். ரேகையில் தப்பு என்று அவர்கள் சொல்லவில்லை. அதை வாங்கிய முறைதான் சரியில்லை என்று நீதிமன்றம் சொல்லி இருக்கிறது.
படிவங்களில் கைரேகை வாங்கும்போது அப்பல்லோ நிர்வாகத்தின் மூலமாகவும், சிகிச்சை அளித்த டாக்டர் மூலமாகவும்தான் அதை பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தைத்தான் நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனால் அதை பொய்யாக்கி தவறான செய்திகளை பரப்பும் ஸ்டாலினுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு அரசியல்வாதிக்கு பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் அது ஸ்டாலினுக்குத்தான் கொடுக்க வேண்டும்.
இதுதவிர மத்திய அரசு அலுவலகங்களில் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்று தரவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் வைத்துள்ளார். அதற்கு தேவையான நடவடிக்கையை மாநில அரசு எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
தி.மு.க. 14 ஆண்டு காலம் மத்திய அரசில் அங்கம் வகித்தது. அப்போது எத்தனை லட்சம் தமிழக இளைஞர்களுக்கு அவர்கள் வேலைவாய்ப்பை பெற்று தந்துள்ளனர்? தங்களின் குடும்பத்தை பற்றித்தான் சிந்தித்தார்களே தவிர, மக்களை பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. இவ்வளவையும் செய்துவிட்டு, தற்போது வேண்டும் என்றே ஒரு குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்.
அ.தி.மு.க. அரசு அறிவித்த அத்தனை திட்டங்களையும் உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது. தைப்பொங்கல் திருநாளுக்கு அனைத்து மக்களுக்கும் ரூ.1,000 பரிசாக வழங்கப்பட்டது. அதை கூட தடுத்து நிறுத்திய கட்சி தி.மு.க. என்பது உங்களுக்கு தெரியும்.
அதேபோல் ஏழை தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான திட்டத்தை தொடங்கி வைத்தோம். அதையும் தடுத்து நிறுத்த தி.மு.க. வக்கீல் ஆர்.எஸ்.பாரதி மூலம் நீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்கினார்கள். தேர்தல் முடிந்த உடன் அனைத்து ஏழை குடும்பத்தினருக்கும் ரூ.2 ஆயிரம் நிதிஉதவியை அ.தி.மு.க. அரசு வழங்கும். ஏழைகளுக்கு கொடுப்பதில் என்ன தவறு? மக்களுக்கு சேவை செய்வதற்கு தான் கட்சி. மக்களுக்கு நன்மை செய்கிற திட்டத்தை தடுக்கிற கட்சிக்கு உரிய பாடத்தை புகட்ட வேண்டும். இவ்வாறு பேசினார்.