அபராதம் விதித்தற்காக காவல்துறை பெண் உதவி ஆய்வாளரை பழி தீர்ப்பதற்காக கத்தியால் கழுத்தை அறுத்த சம்பம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை அடுத்துள்ள பழவூர் கிராமத்தில் நேற்று கோவில் கொடை திருவிழா நடந்திருக்கிறது. சுத்தமல்லியை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசா தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். ஆறுமுகம் என்ற நபருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வாகனத்தில் செல்லும் பொழுது குடிபோதையிலிருந்ததாக கூறி காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசா அபராதம் விதித்திருந்தார். இந்நிலையில் கோவில் திருவிழா பாதுகாப்புப் பணியில் இருந்த மார்கரெட் தெரசாவை பார்த்தவுடன் அந்த ஆறுமுகம் என்ற நபர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்ற, கையில் வைத்திருந்த சிறிய கத்தி மூலம் மார்கரெட் தெரசாவின் கழுத்தில் காயம் ஏற்படுத்தும் அளவிற்கு அறுத்துள்ளார்.
இதனையடுத்து அருகிலிருந்த சக காவலர்கள் ஆறுமுகத்தை கைது செய்ததோடு, மார்கரெட் தெரசாவை மீட்டு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். கழுத்திலும், கன்னத்திலும் காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை எடுத்து வருகிறார் காவல் உதவி ஆய்வாளர் மார்கரெட் தெரசா. இந்த சம்பவத்தில் ஆறுமுகம் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக எதிர்க்கட்சி துணைத்தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனத்தை வைத்துள்ளார். தமிழகத்தில் கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்ற சூழலே நிலவுகிறது என அவர் கூறியுள்ளார்.