கடந்த தேர்தல்களில் அதிமுக சார்பாக பிரச்சாரம் செய்வதற்கு அக்கட்சியின் பொது செயலாளராகவும்,முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.அப்போது அவர் பிரச்சாரத்தில் பேசும் சில வார்த்தைகள் மக்களை ஈர்க்கும் வண்ணம் இருந்தது.குறிப்பாக கண்ணுக்கு எட்டிய தூரம் எதிரிகளே இல்லை என்று கூறும் போது தொண்டர்களும், நிர்வாகிகளும் உற்சாகத்துடன் தேர்தல் வேளைகளில் ஈடுபட்டனர். கடந்த 2016 டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆளுமை மிக்க தலைவர்கள் அதிமுக கட்சியில் இல்லை என்றும் பிரச்சாரத்தில் மக்களை கவரக் கூடிய தலைவர்களும் இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது.இந்த நிலையில் அக்கட்சியில் ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தலை சந்தித்து வருகிறது.
கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.மேலும் வருகிற மே 19ஆம் தேதி மீதமுள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதனால் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் அமைச்சர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சாரத்தின் போது ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் கொஞ்சம் எடுபடுவதாகவும்,அமைச்சர்கள் பேசும் போது தவறாக பேசுவதும், சின்னம் மற்றும் வேட்பாளர்களின் பெயர்களை தவறாக சொல்லுவதும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாக உள்ளது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் எடப்பாடி பிரச்சாரமும் கொங்கு மண்டலத்தில் மட்டுமே மக்கள் மத்தியில் சென்றடைந்தாகவும் தென் மாவட்டங்களில் போதிய வரவேற்பை பெறவில்லை என்றும் கூறுகின்றனர். இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றத்தில் ஓபிஎஸ் பிரச்சாரம் செய்யும் போது மக்கள் கலைந்து சென்றுள்ளனர் அதற்கு ஓபிஎஸ் அம்மா,தங்கச்சி என்னை பார்த்தால் பாவமா இல்லையா நில்லுங்க என் பேச்சை கேளுங்க என்று கூறியுள்ளார் இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது பற்றி அரசியல் விமர்சகர்கள் கூறும் போது மக்களை கவரும் தலைவர்கள் அதிமுகவில் இல்லாதது பெரும் பின்னடைவாக உள்ளது என்று கூறிவருகின்றனர்.