ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. அதே சமயம் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 39 இடங்களையும் வென்றுள்ளது. புதுச்சேரியின் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததற்குப் பின் சேலத்தில் முதல்முறையாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “இந்த மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுடன் ஒப்பிடுகையில் அதிமுக தான் கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது. அதாவது 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலைவிட இந்தத் தேர்தலில் அதிமுக ஒரு சதவீதம் கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது. ஒரு சதவீதம் அதிகமாக வாக்குகள் பெற்றுள்ளதால் அதிமுகவுக்கு இது வெற்றியே ஆகும். சசிகலா, ஓபிஎஸ் பிரிந்து சென்றதால்தான் அதிமுகவுக்கு ஒரு சதவீத வாக்கு அதிகரித்துள்ளது.
திமுக மற்றும் பாஜக தங்களின் கூட்டணி பலத்தோடு தேர்தலை எதிர்கொண்டது. இருப்பினும் 2014 தேர்தலுடன் ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி 2024 தேர்தலில் 0.62% வாக்குகளை குறைவாகவே பெற்றுள்ளது. அதே போன்று திமுக 2019 இல் பெற்றதை விட 6.59% குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. திமுக, பாஜகவை விட அதிமுகதான் அதிக வாக்குகளை பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் பாஜகவிற்கு வாக்கு சதவிகிதம் அதிகரிக்கவில்லை. திமுகவின் வாக்கு சதவிகிதமும் குறைந்துள்ளது. தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள சரிவுகள் சரி செய்யப்படும். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா ஆகியோர் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். மற்ற கட்சிகளில், அக்கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அதாவது பாஜகவுக்கு மோடி வந்தார். திமுகவில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டேர் பரப்புரை மேற்கொண்டனர். ஆனால் அதிமுகவை பொறுத்தவரை நான் மட்டுமே அனைத்து இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்தேன். தமிழ்நாட்டுக்கு 8 முறை வந்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ரோடு ஷோ நடத்தினார்கள், இருந்தும் பாஜக வெற்றி பெறவில்லை.
எஸ்.பி.வேலுமணிக்கும் எனக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். அதிமுகவில் எந்தக் குழப்பமும் இல்லை, பிளவும் இல்லை. பாஜகவுடன் கூட்டணி இருந்திருந்தால் வென்றிருப்போம் என நடந்து முடிந்ததைப் பற்றிப் பேசக்கூடாது. சூழலுக்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்பதுதான் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு. எனவே இது போன்ற முடிவுகள் கட்சிக்கு பின்னடைவு ஆகாது. எனவே 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை” எனத் தெரிவித்தார்.