கோவை உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 6 நபர்கள் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டும் இன்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலாளர், டிஜிபி போன்ற உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரிக்க பரிந்துரை செய்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சி.பி. ராதாகிருஷ்ணன் “கோவையை தொடர்ந்து குறிவைப்பதன் நோக்கம், இது பொருளாதாரத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக இருக்கும் மிகப்பெரிய நகரம் என்பது தான். கோவையைத் தகர்த்துவிட்டால் அவர்களின் அடுத்த குறி சென்னையாகத்தான் இருக்கும். இதனை மனதில் கொண்டு தமிழக முதல்வர் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையில் சிறப்பான அதிகாரிகளை நியமித்தால் மட்டும் போதாது. அந்த அதிகாரிகள் முழுமையான சுதந்திரத்தோடு செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும். அவர்களின் கைகளைக் கட்டிப்போட்டு அவர்களைச் செயல்படச் சொன்னால் அவர்கள் எப்படிச் செயல்படுவார்கள்.
கோவை காக்கப்பட வேண்டும். மக்களிடத்தில் விழிப்புணர்வு வர வேண்டும். 75 கிலோ பிடித்ததாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு கிடைத்த நம்பகமான தகவலின் படி ஒன்றரை டன் வெடிமருந்து இருந்ததாக தகவல் வந்துள்ளது. இதில் தமிழக காவல்துறை மூடி மறைக்காமல் உண்மையை வெளிக்கொணர வேண்டும்.
அவர்களது தொடர்பு என்பது தமிழக எல்லையைத் தாண்டியும் இருக்கிறது. ஆகவே இவர்களுக்கு எங்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க என்.ஐ.ஏ. உடன் தமிழக காவல்துறை முழுமையாக ஒத்துழைக்கவேண்டும். கோவையைப் பயங்கரவாதிகளிடம் இருந்து காத்து நிற்பதற்காக கோவை பாஜக, கோவை மாநகரம் முழுவதும் வருகின்ற திங்கள் கிழமை காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை முழுமையான பந்திற்கு வேண்டுகோள் விடுக்கிறது.” எனக் கூறினார்.