ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமான வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், திமுக இடைத்தேர்தல் தேர்தல் பணியை தொடங்கிவிட்டது. அந்த தொகுதியில் அதிமுக நேரடியாக போட்டியிட உள்ளதாக இ.பி.எஸ் அணி தெரிவித்திருந்ததது. அதே சமயம் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் நாங்களும் போட்டியிடுவோம் என ஓ.பி.எஸ் அறிவித்துள்ளார். மேலும் எங்களது கூட்டணி கட்சிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரவுள்ளோம் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியனை அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியினர் நேரில் சந்தித்துள்ளனர். செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட பழனிசாமி ஆதரவாளர்கள் ஜான்பாண்டியனை சந்தித்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்களுக்கு ஆதரவு அளிக்கவேண்டும் எனக் கேட்டுள்ளனர்.
முன்னதாக இடைத்தேர்தலில் எங்களுக்கு ஆதரவு அளிக்கக்கோரி அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்களான பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், புரட்சி பாரதம் ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோரையும் சந்தித்து ஆதரவு கேட்க இருப்பதாக ஓ.பி.எஸ் கூறியிருந்த நிலையில் தற்போது அவரை முந்திக்கொண்டு பழனிசாமி அணியினர் ஜான் பாண்டியனை சந்தித்து ஆதரவு கோரியுள்ளனர். இதேபோல ஓ.பி.எஸ் ஆதரவு கேட்கவிருந்த பாமகவும் இடைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று கூறியுள்ளது ஓ.பி.எஸ் அணியினரை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது.