சூலூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜல்லிப்பட்டி, செஞ்சேரிமலை, சுல்தான்பேட்டை ஆகிய இடங்களில் திறந்த வேனில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தார்.
அப்போது அவர்,
தமிழக மக்கள் ஏற்றம் பெறவேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் அ.தி.மு.க. ஆனால் தி.மு.க. அவர்களுடைய குடும்பம் ஏற்றம் பெறுவதற்காக உருவாக்கப்பட்டது. 2 நாட்களுக்கு முன்பு இங்கு பேசிய துரைமுருகன், இன்னும் 25 நாட்களில் புதிய முதல்-அமைச்சரை உருவாக்கிக் காட்டுவேன் என கூறியுள்ளார்.
முதல்-அமைச்சரை உருவாக்குவதற்கு இவருக்கு என்ன வலிமை இருக்கிறது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தனது மகன் ஏதாவது ஒருவகையில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக பல்வேறு குறுக்குவழிகளை மேற்கொண்டார்.
இவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டபோது, 12 கிலோ தங்கம், ரூ.13 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வளவு பணம் அவர்களுக்கு எப்படி வந்தது என்பதை மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். 25 நாட்கள் அல்ல, 25 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. ஆட்சிக்கு வரமுடியாது.
எங்கள் கட்சியை சார்ந்த எம்.எல்.ஏ.க்கள் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக கொறடா மூலம் சபாநாயகரிடம் புகார் அளிக்கப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கொந்தளிப்பது ஏன்? இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் இந்த 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வர காரணமானவர் மு.க.ஸ்டாலின் என்பதை அறியமுடிகிறது.
தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரியாணி கடையில் தகராறு செய்வது, அழகு நிலையத்தில் பணிபுரியும் பெண்களை தாக்குவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள். ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மு.க.ஸ்டாலின் பஞ்சாயத்து பேசி வருகிறார்.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ராஜ்குமார் என்பவர் தனது வீட்டில் பணிபுரியும் பெண்ணிடம் பாலியல் குற்றம் செய்ததற்காக வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றத்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.
அதேபோன்று கோவை இருகூர் பகுதியை சேர்ந்த தி.மு.க. செயற்குழு உறுப்பினர் சந்திரன், சன் ராஜேந்திரன் உள்பட 5 பேர் ரெயிலில் பயணம் செய்தபோது, ஒரு பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபட்டுள்ள தி.மு.க.வை சார்ந்தவர்கள் மீது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? என்பதை தெரிவிப்பாரா? சூலூர் சட்டமன்ற தொகுதி என்றென்றும் அ.தி.மு.க.வின் கோட்டை. இவ்வாறு பேசினார்.