தேனி பாராளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார் இளங்கோவன்.
கேள்வி:- ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் உங்களை எதிர்த்து போட்டியிடுகிறார்களே?
பதில்:- என்னை எதிர்த்து போட்டியிடுபவர்களை நான் போட்டியாகவே கருதவில்லை. என்னை பொறுத்தவரையில் நான் சுடுகாட்டில் தியானம் செய்து அரசியல் செய்பவன் அல்ல. அல்லது கிளிஜோசியம் பார்த்து அரசியல் செய்பவன் அல்ல.
மக்களின் குறைகளை அறிந்து அதை தீர்ப்பதற்காக பாடுபடுகின்ற ஒரு அரசியல்வாதியாக இருக்கின்றேன். 50 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரனாக இருக்கின்றேன்.
தேனியில் நான் போட்டியிட வேண்டும் என்று ராகுல்காந்தி உத்தரவிட்டு இருக்கிறார். கண்டிப்பாக போட்டியிடுவதோடு மட்டுமல்ல. மிகப்பெரிய வெற்றியை நான் பெறுவேன். காரணம் மக்கள் இன்றைக்கு மதவாத சக்திகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்று முடிவு எடுத்திருக்கிற காரணத்தால் மிகப்பெரிய வெற்றியை நான் பெறுவேன்.
கேள்வி:- தேனியில் வரும் 6 தொகுதிகளில் பெரியகுளம், ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதியில், இடைத்தேர்தல் வருகிறது. அது ஏற்கனவே அ.தி.மு.க. வெற்றிபெற்ற தொகுதி. ஓ.பி.எஸ். தொகுதியாக போடி நாயக்கனூர் உள்ளது. நீங்கள் எப்படி சவாலை எதிர்கொள்வீர்கள்?
என்னைப் பொறுத்தவரையில் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவையே சந்தித்தவன் நான். எனவே துணை முதல்வரை கண்டு நான் பயப்பட போவதில்லை. அவர்களை அவர்களுடைய இடத்திலேயே தோற்கடிப்பேன். இவ்வாறு கூறினார்.