அதிமுக, பாஜக கூட்டணியில் சிவகங்கை தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டபோதே அதிமுக தொண்டர்கள் அப்செட்டானார்கள். இந்த நிலையில் எச்.ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கூட்டணி கட்சியினரை சந்திக்கும் வாய்ப்பாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.
ஞாயிற்றுக் கிழமை சிவகங்கை தொகுதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி பொன்னமராவதியிலும், மாலை ஆலங்குடியிலும் செயல்வீர்கள் கூட்டம் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு அதிமுக நிர்வாகிகள் பலருக்கும் அழைப்பு இல்லை என்ற குற்றச்சாட்டை அதிமுகவினரே முன்வைத்தனர். மேலும் ஆலங்குடியில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுக, தேமுதிக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தங்கள் கருத்தை சொல்ல தயாராகிச் சென்றனர். ஆனால் அதிமுகவினர் சிலருக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்தவர்கள் மற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகளை பேச அனுமதிக்கவில்லை.
அதனால் தேர்தல் பணி குறித்த தங்கள் கருத்தை கேட்கக்கூட நேரம் ஒதுக்கவில்லை அப்பறம் எப்படி தேர்தல் பணியை இணைந்து செய்ய முடியும். இந்த கூட்டத்தில்கூட பேச்சுரிமை தடுக்கப்படுவது சரியானதில்லை என்றனர். தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், எனக்கு 3 மொழி தான் தெரியும், ஆனால் அண்ணன் ராஜாவுக்கு ஜெயலலிதாவைப் போல 7 மொழிகள் தெரியும். அதனால் அண்ணன் அமைச்சராகி ஆலங்குடியை இந்தியாவிற்கே அடையாளம் காட்டுவார் என்றார்.
இறுதியாக பேசிய பாஜக வேட்பாளர் எச்.ராஜா, தேர்தல் அறிக்கையிலேயே ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்து செய்யவும் மற்றும் காவிரி குண்டாறு திட்டம் இணைப்பை வலியுறுத்தி ஆட்சிக்கு வந்ததும் செய்வோம் என்றவர், ப.சிதம்பரமும் அவர் மகனும் ஜாமின் வாங்க ஓடுகிறார்கள். அவர்களால் எப்படி தொகுதிக்கு வரமுடியும் என்றார்.