திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் நேற்று திமுகவினரால் கொண்டாடப்பட்டது. தொண்டர்கள் அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு செய்தனர். அமைச்சர்களும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அடையாறு மற்றும் மேடவாக்கத்தில் நேற்று பிறந்த 34 குழந்தைகளுக்கு தங்கமோதிரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் கோவை, திருச்சி, சென்னை, மதுரை ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் வரும் பயணிகளுக்கு 2% பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யும் பணி நடைபெற்றது.
உலக சுகாதார அமைப்பு, விமான நிலையங்களில் எடுக்கப்படுகிற இந்த சோதனைகளுக்கு விலக்கு அளித்துள்ளார்கள். இனிமேல் தேவையில்லை என்றும் சொல்லியுள்ளார்கள். இந்நிலையில், கடந்த ஒருவாரமாக தொடர்ச்சியாக 30,000-க்கும் மேற்பட்ட பாதிப்பு என்பது சீனாவில் இருக்கிறது. இதுகுறித்து மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்திடம் கேட்டு சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு விதிப்பது குறித்த திட்டம் இந்திய அரசாங்கத்திடம் இருக்கிறதா எனக் கேட்டு, அப்படி இருந்தால் அதை இங்கும் நடைமுறைப்படுத்துவோம்.
அரசாங்க மருத்துவமனை என்பதாலேயே குற்றம் சாட்டி விடலாம் என்ற எளிதான மனநிலை யாருக்கும் வரக்கூடாது. அரசாங்க மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு 6 லட்சம் பேர் பயனடைகிறார்கள்,. உள்நோயாளிகளாக 70,000 நபர்கள் சிகிச்சை பெறுகிறார்கள். தினந்தோறும் 10,000 அறுவை சிகிச்சைகள் நடைபெறுகிறது.
நீட் விலக்கு மசோதா குடியரசு தலைவரிடம் இருந்து உள்துறை அமைச்சகத்திற்கும் சுகாதாரத்துறைக்கும் கல்வித்துறைக்கும் அனுப்பப்பட்டது. சுகாதாரத்துறையும் கல்வித்துறையும் சில கேள்விகளை எழுப்பியிருந்தனர். தமிழக அரசு அந்தக் கேள்விகளுக்கான பதில்களை அனுப்பி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது” என்றார்.