தமிழக அரசு நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கடந்த 7 மாதங்களாக கிடப்பில் வைத்திருந்தார் ஆளுநர் ரவி. இந்த நிலையில், இன்று அந்த சட்டமசோதாவை தமிழக அரசுக்கே திருப்பியிருக்கிறார். ஆளுநரின் இந்த செயல்களுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இது குறித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ், தனது ட்விட்டர் பக்கத்தில், "நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான தமிழக அரசின் சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பது துரதிருஷ்டவசமானது. நீட் விலக்கு சட்டத்தை திருப்பி அனுப்புவதற்காக உச்சநீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள் காட்டி ஆளுநர் கூறியுள்ள காரணங்கள் தேவையற்றவை. நீட் விலக்கு சட்டம் தமிழ்நாட்டிலுள்ள கிராமப்புற, ஏழை மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்று ஆளுநர் கருத்து தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆளுநரின் நிலைப்பாடு சமூகநீதிக்கு எதிரானது. எந்த அடிப்படையில் அந்த முடிவுக்கு வந்தார் என்பது தெரியவில்லை.
நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருந்தால், நீட் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் கருத்துகள், தமிழ்நாடு நீட் விலக்கு சட்டத்தை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது. அதனால், நீட்விலக்கு சட்டத்தை குடியரசுத் தலைவருக்கு தான் ஆளுநர் அனுப்பியிருக்க வேண்டும். நீட் விலக்கு சட்டம் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டு விட்ட நிலையில், இனியும் சர்ச்சைகளும், தாமதங்களும் ஏற்படுவதைத் தடுக்க, சட்டப்பேரவையை அவசரமாக கூட்டி, திருத்தங்களுடனோ, திருத்தமின்றியோ சட்டத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.
திருப்பி அனுப்பப்படும் நீட் விலக்கு சட்டத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். குடியரசுத் தலைவரிடமும் ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் "என்று பதிவு செய்துள்ளார்.