புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதுச்சேரி மாநில தலைவர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் நேர்காணல் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுடன் டெல்லி சென்றார். ஆனால் பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் வெளிநாட்டுக்கு சென்று இருக்கும் நேரத்தில், முதல்வர் நாராயணசாமி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்து சென்று, பாரத பிரதமரை பார்க்க வில்லை. குடியரசுத் தலைவர் டெல்லியில் இருந்தும் அவரையும் பார்க்காமல் மக்கள் பணத்தை வீணடித்து விட்டார்.
மேலும் 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது இந்தியாவின் நிழல் பிரதமராக இருந்த முதல்வர் நாராயணசாமி அப்போது ஏன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது மத்தியில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கூறுவது ஏன்? இவ்விவகாரத்தில் நாராயணசாமி நாடகம் ஆடுகிறார்.
புதுச்சேரி சட்டமன்றத்தில் 13 முறை புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். புதுச்சேரியில் 100% படித்த மக்கள் இருக்கிறார்கள் அவர்களுடைய கருத்துகளை கேட்டு, ஓட்டு கணக்கெடுப்பின் மூலம், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்றால், அதை மத்திய அரசு வழங்கும். இவ்வாறு சாமிநாதன் கூறினார்.