நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ராசிபுரம் நகராட்சியையும் ஆளும் திமுக தட்டித் தூக்கினாலும் கூட, குறிப்பிட்ட ஒரு வார்டில் புள்ளபூச்சி என விமர்சிக்கப்பட்ட சுயேச்சை வேட்பாளர் திமுகவை தோற்கடித்த சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மிகப்பழமையான நகராட்சிகளுள் ஒன்று. 1948ல் உதயமானது. இந்த நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி 24 வார்டுகளில் அதிரிபுதிரியாக வென்று, நகராட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. திமுகவின் அசத்தலான வெற்றி எந்தளவுக்கு பேசப்படுகிறதோ அதே அளவுக்கு 12வது வார்டில் சுயேச்சை வேட்பாளரிடம் திமுக மரண அடி வாங்கியதும் நாமக்கல் மாவட்ட அரசியல் களத்தில் ஹாட் டாபிக் ஆக மாறியிருக்கிறது.
நடந்தது இதுதான்...
ராசிபுரம் நகர திமுக முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் சதீஸ், டிரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஏரியாவில் பசையுள்ள பார்ட்டி. முன்னாள் திமுக நாமக்கல் மா.செ.வும், முன்னாள் மத்திய அமைச்சருமான காந்திசெல்வனின் தீவிர ஆதரவாளர். அவருடைய இன்புளூயன்சில் தன்னுடைய கம்பெனிக்கு சில அரசு ஒப்பந்தங்களைக் கூட பெற்றிருப்பதாகச் சொல்கிறார்கள் உடன்பிறப்புகள்.
இந்நிலையில், 12வது வார்டில் தன் மனைவி சசிரேகாவுக்கு சீட் கேட்டு கிழக்கு மா.செ. கே.ஆர்.என். ராஜேஷ்குமார் எம்.பி.யிடம் பேசியிருக்கிறார் சதீஸ். அவரோ, 'பார்த்துக்கலாம்' என்று சொல்லிவிட்டு பின்னர் சீட் தர மறுத்திருக்கிறார். ஆனால் காந்திசெல்வனின் தீவிர ஆதரவாளர் என்பதால்தான் சதீஸின் மனைவிக்கு சீட் மறுக்கப்பட்டதாக சொல்கின்றனர்.
அதிருப்தி அடைந்த சதீஸ், 12வது வார்டில் தன் மனைவி சசிரேகாவை சுயேச்சையாக களமிறக்கினார். கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக உடனடியாக அவர் திமுகவில் இருந்து கட்டம் கட்டப்பட்டார். வார்டில் மொத்தமுள்ள 1840 வாக்குகளில் அவர் சார்ந்த சவுராஷ்டிரா சமூக வாக்குகள் மட்டும் 600 உள்ளன. திமுகவோ, அந்த வார்டின் செயலாளர் சிவராமனின் மனைவி சரிதாவை களமிறக்கியது. அதிமுக சார்பில் மா.ராதாமணி போட்டியிட்டார்.
ராசிபுரம் நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளிலும் தன்னையும், திமுகவையும் எதிர்த்து சதீஸின் மனைவி போட்டியிடும் 12வது வார்டு, நகர்மன்ற தலைவராக வாய்ப்பு உள்ளதாக பேசப்படும் திமுக நகர அமைப்பாளர் சங்கரின் மனைவி போட்டியிடும் 15வது வார்டு, அதிமுக முக்கிய புள்ளி பாலசுப்ரமணியம் மனைவி கவிதா போட்டியிடும் 11வது வார்டு ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே மா.செ., கூடுதல் கவனம் செலுத்தினார் என்றும், பணத்தை தண்ணீராய் வாரி இறைத்தார் என்றும் சொல்கிறார்கள் உடன்பிறப்புகள்.
இது தொடர்பாக திமுக உடன்பிறப்புகள் மேலும் கூறுகையில், ''12வது வார்டில் சுயேச்சையாக போட்டியிடும் சதீஸின் மனைவி வெற்றி பெற்றால், அது காந்தி செல்வனுக்கு கிடைத்த வெற்றியாகவே கருதினார் மா.செ. ராஜேஷ்குமார். அந்த வார்டில் மட்டும் வாக்காளர்களுக்கு திமுக தரப்பில் தலா 5000 ரூபாய் வீதம் 50 லட்சம் ரூபாயை அள்ளி தெளிக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி பரப்புரை நடந்த ஒவ்வொரு நாளும் வாக்காளர்களுக்கு பிரியாணி விருந்தும் களைகட்டியது. இந்த ஒரு வார்டில் மட்டும் ஆளுங்கட்சி பரப்புரை, பூத் கமிட்டி, விருந்து என கிட்டத்தட்ட 70 லகரங்களை அள்ளி கொட்டியிருந்தது.
சதீஸும் லேசுபாசான ஆள் இல்லீங்க. அவரும் திருப்பதியில் இருந்து 1000 லட்டு வாங்கி வந்து, வாக்காளர்களுக்கு கொடுத்து ஆன்மீக ரீதியாகவும், சென்டிமென்டாகவும் 'டச்' பண்ணிட்டாரு. அதுமட்டுமின்றி, வாக்காளர்களுக்கு தலா 2000 ரூபாயை பாய்ச்சினார். தேர்தல் நேரத்தில் நாமக்கல் மாவட்டம் முழுக்கவே இந்த வார்டு பற்றிதான் ஒரே பேச்சாக இருந்தது. இப்படி ஆளும்தரப்பும், சுயேச்சை தரப்பும் வார்டு மக்களை கரன்சி மழையில் சொட்டச் சொட்ட நனைய வைத்துவிட்டனர்” என்றனர்.
தேர்தலில் 1356 வாக்குகள் பதிவாகின. இதில் சதீஸின் மனைவி சசிரேகா 840 வாக்குகள் பெற்று, வெற்றி அடைந்தார். திமுகவுக்கு 483 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. அதிமுக வெறும் 33 வாக்குகளை பெற்று டெபாசிட் இழந்தது. ராசிபுரம் நகராட்சியில் வெற்றி பெற்ற ஒரே ஒரு சுயேச்சை வேட்பாளர் சதீஸின் மனைவிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சதீஸிடம் கேட்டபோது, ''திமுகவில் 20 ஆண்டுகளாக உழைத்து இருக்கிறேன். கடந்த 2006ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் வெறும் 3 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனேன். அதனால் இந்தமுறை மீண்டும் வாய்ப்பு கேட்டேன். காந்திசெல்வன் ஆதரவாளர் என்பதால் எனக்கு மா.செ. சீட் தர மறுத்துவிட்டார்.
திமுக வேட்பாளர்கள் கூட்டத்தில், என் பெயரைச் சொல்லி 'அவனெல்லாம் புள்ளபூச்சி. தேர்தலில் ஜெயிக்க முடியாது. ஒரு பொருட்டாகவே நினைக்க வேணாம்,' என்று விமர்சனம் செய்திருக்கிறார். இதை கேள்விப்பட்டு ரொம்பவே ஆதங்கப்பட்டோம். அதனால்தான், ஒரு புள்ளப்பூச்சி என்னென்ன செய்யும் என்று செயலில் காட்டிவிட்டோம்.
ஒவ்வொரு வாக்காளரையும் பத்துக்கும் மேற்பட்ட தடவை வீடு வீடாகச் சென்று நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தோம். சுயேச்சை வேட்பாளராக வெற்றி பெற்றதால், இனி திமுகவில் சேரும் திட்டம் இல்லை. மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களைச் செய்வோம்'' என்றார்.
எது எப்படியோ... கட்சிக்குள்ளும், வேட்பாளர்களுக்கும் கடும் போட்டி என்றால் வாக்காளர்களுக்கு கொண்டாட்டம்தானே!