சமீபத்தில் டெல்லியில் நடந்த பா.ஜ.க. சீனியர் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தலைமை நிர்வாகிகளில் ஒருவரான ராம்மாதவ், தமிழக அரசியலில் நாம் தீவிர கவனம் செலுத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மேலும் வரும் மார்ச், ஏப்ரலில் ரஜினிகாந்த், தன் புதுக்கட்சியை தொடங்க இருப்பதாக சொல்கின்றனர். எனவே ரஜினி கட்சியை ஆரம்பித்ததும், நாம் அவரோடு சேர்ந்து வலிமையான கூட்டணியை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதில் அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் இணைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். அதனால் நம் கூட்டணி வலிமையான கூட்டணியாக இருக்கும் என்றும் பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது. கட்சியைத் தொடங்கியதும் ரஜினி தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது. அதனால் திமுகவுக்கு எதிரான பலமான அரசியல் கூட்டணியாக தமிழகத்தில் இருப்போம் என்றும் கூறியதாக சொல்கின்றனர்.
தமிழகத்தில் இல.கணேசனுக்கு உரிய முக்கியத்துவமும், பதவியும் பாஜக தலைமை கொடுக்கவில்லை என்று தமிழக பாஜக சீனியர்கள் வருத்தத்தில் இருப்பதாக கூறுகின்றனர். இதற்கிடையே தமிழக பாஜக தலைவர் பதவியை குறிவைத்து கட்சியின் சீனியர்கள் பலரும் ரேஸில் உள்ளதாக சொல்கின்றனர். இதில் யாருக்கு தலைவர் பதவி கொடுக்கலாம் என்று பாஜக தலைமை சாதி வாரியாவும் கணக்குகள் போடப்பட்டு வருவதாக சொல்கின்றனர். அந்த வகையில் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன், கருப்பு முருகானந்தம் இவர்களோடு, ராமர் பாலம் தொடர்பான வழக்கைப் போட்ட குப்புமுத்துவும், வானதி சீனிவாசனும் பரிசீலனைப் பட்டியலில் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றனர்.