ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 31ல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, பிப்ரவரி 7 நிறைவடைகிறது. வாக்குப்பதிவு பிப்ரவரி 27 என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி எனவும் தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி, கூட்டணியில் இருந்த மற்றொரு கட்சியான தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டது. தமாகா சார்பில் போட்டியிட்ட யுவராஜ் 8904 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இந்தநிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவித்ததையொட்டி, தமாகா போட்டியிடும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த தொகுதியில் அதிமுகவே நேரடியாக போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக சார்பில் கே.வி. ராமலிங்கத்தை களமிறக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், மறைந்த திருமகன் ஈவேரா தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெறும் என கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். அதிமுகவோ, பாஜகவோ யார் போட்டியிட்டாலும் காங்கிரசுதான் வெற்றி பெறும்" எனத் தெரிவித்துள்ளார். மேலும், “பாஜக மத்தியில் தங்கள் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஜனநாயக விரோத செயலை கையாளுகின்றனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை என்று பாஜகவுக்கும் தெரியும். இருந்தாலும், சர்வாதிகார நடைமுறையை கொண்டு வருவதற்காக ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொண்டுவர முயல்கிறது" என்றார்.