Skip to main content

பாஜக பிரமுகர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது... கும்பகோணத்தில் பரபரப்பு 

Published on 07/08/2020 | Edited on 07/08/2020
dddd

                                                       பாலன்                              சரவணன்

 

கும்பகோணம் பகுதி ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் மண்டல பொறுப்பாளரின் தந்தை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பாஜக நகர தலைவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலை சேர்ந்தவர் கோபாலன். ஓய்வு பெற்ற ஆசிரியரான அவர் அப்பகுதியில் உள்ள உத்திராதி மடத்தில் மேலாளராக இருந்து வந்தார். கோபாலனின் மகன் வாசுதேவன் ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் மண்டல பொறுப்பாளராக இருந்தவர். இந்த சூழலில் மடத்திற்கு சொந்தமாக பல கிராமங்களில் சொத்துகள், கட்டிடங்கள், நிலங்கள் இருக்கின்றன.

 

நாச்சியார்கோயிலில் உள்ள கடைகளில் ஒரு கடையில், நாச்சியார்கோயில் பாஜக நகர தலைவர் சரவணன் டெய்லர் கடை நடத்தி வந்தார். மடத்தின் நிர்வாகத்தினர், அங்குள்ள அனைத்து கடைகளையும் காலி செய்ய சொல்லியுள்ளனர். அனைவரும் கடைகளை காலி செய்துவிட்டனர். ஆனால் தையல்கடை நடத்திவந்த பாஜக நகர தலைவர் சரவணன் மட்டும் கடையை காலி செய்ய முடியாது என மறுத்துவிட்டார்.

 

இதையடுத்து மடத்தின் சார்பில் கோபாலன் நீதிமன்றம் சென்றார். நீதிமன்ற தீர்ப்பு மடத்திற்கு ஆதரவாக இருந்தது. அந்த உத்தரவின்படி கடைகளை அகற்றப்பட்டதால், கோபாலன் மீது ஆத்திரம் கொண்ட சரவணன் ஜூலை ஒன்றாம் தேதி இரவு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த கோபாலனை, சரவணன் கத்தியால் குத்தி கொலை செய்து ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டார்.

 

இது குறித்து நாச்சியார்கோயில் போலீசார் சரவணனை மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்தநிலையில் சரவணனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தததன் பேரில், ஆட்சியர் கோவிந்தராவ் உத்தரவிட்டதையடுத்து சரவணன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்