கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் கலந்து கொண்டார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழக மக்கள் எங்களைப் போன்ற நிர்வாகத்திறன் உள்ளவர்களை அங்கீகரிக்கவில்லை. ஆனால் மத்திய அரசு திறமையானவர்களை அடையாளம் கண்டு கொள்கிறது.
பிரதமர், உள்துறை அமைச்சர் எங்களது திறமைகளை அடையாளம் கண்டு ஆளுநர்களாக நியமிக்கின்றனர்; ஆனால், தமிழ் மக்கள் எங்கள் திறமைகளை அடையாளம் கண்டுகொள்ளவில்லை; தமிழ் மக்கள் எங்களை எம்.பி. ஆக்கியிருந்தால், அமைச்சர்கள் ஆகியிருப்போம். ஆனால் எங்கள் திறமைகளை வீணடிக்க வேண்டாம் என மத்திய அரசு கருதி எங்களை ஆளுநர் ஆக்கியுள்ளது" எனக் கூறினார்.
இந்நிலையில் இது குறித்தான செய்தியின் புகைப்படத்தை பகிர்ந்து எம்.பி. வெங்கடேசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "ராஜ்பவன்கள் எல்லாம் பெயிலானவர்கள் படிக்கிற டுடோரியல் கல்லூரிகள் என்கிறீர்களா தமிழிசை அவர்களே; பரிட்சையில் பெயில் ஆன பிறகு பிரதமர் பாஸ் போட்டு விட்டார் எனில் அது போலிச் சான்றிதழ் இல்லையா?" எனக் கூறியுள்ளார்.