![ops](http://image.nakkheeran.in/cdn/farfuture/PvDJK7EY1R0w7YH32hCXc-gZHrVOQ37GyPm0rEWK8VU/1637306054/sites/default/files/inline-images/ops4_6.jpg)
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று (19.11.2021) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, ஆட்சிக்கு வந்ததுமுதல் விவசாயிகளுக்குச் சேவை செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம் எனத் தெரிவித்த அவர், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் ஓராண்டுக்கு மேல் போராடிவந்த நிலையில், தற்போது பிரதமர் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்துவருகின்றனர். ‘வரப்போகின்ற பஞ்சாப், உ.பி. சட்டமன்ற தேர்தலைக் கருத்தில்கொண்டு, அந்த அச்சத்தால் எடுக்கப்பட்ட முடிவு இது’ என முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இதுகுறித்து தெரிவித்துள்ளதாவது, ''மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற்றது விவசாயிகளின் நண்பர் மோடி என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது. இது அவரின் பெருந்தன்மை, விவசாயிகள் மீதான அக்கறையை வெளிப்படுத்துகிறது. பிரதமரின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதற்காக அதிமுக சார்பில் பிரதமருக்கு நன்றி'' தெரிவித்துள்ளார்.