இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் ஈரோடு ஆட்சியர் அலுவலகம் வந்து மாவட்ட அதிகாரி ஒருவரிடம் மனு கொடுத்தார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "நமது நாட்டின் சுதந்திர தின விழாவைக் கச்சத்தீவில் கொண்டாட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதை செய்ய வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தப்படி நம்முடைய மீனவர்கள் அங்கு தங்குவதற்கும், ஓய்வெடுக்கவும் எந்த விதமான தடையும் கிடையாது. ஆனாலும் இலங்கை அரசுதான் கச்சத்தீவில் ஆதிக்கம் செலுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் அங்கு நடக்கக்கூடிய அந்தோணியார் விழாவில் கூட இலங்கை அரசின் ஆதிக்கம் தான் இருக்கிறது. தமிழகத்துக்கு கச்சத்தீவில் உள்ள உரிமையை நிலைநாட்ட தமிழக அரசு சார்பில் அங்கு சுதந்திர தின விழாவைக் கொண்டாட வேண்டும்.
கேரள மாநிலம் மூணாறு பகுதியில் பெருமழை, வெள்ளம் காரணமாக 80-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பலியாகி உள்ளனர். உயிரிழந்த மக்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக தேயிலை நிறுவனம் ரூபாய் 5 லட்சம், கேரள மாநில அரசு ரூபாய் 5 லட்சம் அறிவித்துள்ளது. இந்தத் தொகை போதாது ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
மக்களுக்கு அங்கு வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். உயிரிழந்தவர்கள் அனைவரும் தமிழக மக்கள் என்பதால் இறுதிச்சடங்கிற்கு உறவினர்கள் அங்கு சென்றுவர இ-பாஸ் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.
தி.மு.க. மக்களவை உறுப்பினர் கனிமொழி அரசியல் நாடகத்தை திட்டமிட்டு நடத்தியிருக்கிறார். விமான நிலையத்தில் உள்ள பெண் அதிகாரி ஹிந்தியில் பேசியிருக்கிறார். கனிமொழி இதனைத் திசைதிருப்பி ஹிந்தி மொழியை மத்திய அரசு திணிக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்குகிறார். இத்தகைய போக்கை கனிமொழியும், தி.மு.க.வினரும் பின்பற்றினால் தி.மு.க.வினர் நடத்தக்கூடிய சி.பி.எஸ்.இ. பள்ளிகள் முன்பு நாங்கள் போராட்டம் நடத்துவோம்.
நாடு முழுக்க மும்மொழிக் கல்வி இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் திட்டமிட்டு வேண்டுமென்றே அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் இதனை எதிர்க்கின்றன. எம்.ஜி.ஆர். அல்லது ஜெயலலிதா இருந்திருந்தால் மும்மொழி கல்விக்கொள்கையை அமல்படுத்தியிருப்பார்கள். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எதிர்த்து பேசுவார் எனக் கருதி, தி.மு.க.வின் கொள்கைகளை அ.தி.மு.க. முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடைமுறைப்படுத்தி கொண்டிருக்கிறார். தமிழக அரசு தைரியமாக மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும். அப்போதுதான் முதல்வருக்கு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயரில் ஆட்சி நடத்துகிறார் என்ற பெயர் கிடைக்கும்.
தமிழகத்தில் அசுர பலத்தோடு இருக்கும் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு மாற்றாக நடிகர் ரஜினிகாந்த் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றத்தை கொண்டு வருவார். ஊழலற்ற தூய்மையான நிர்வாகத்தை அளிக்கும் ஆன்மீக அரசியலை முன்னெடுத்து பிரசாரத்தை விரைவில் அவர் துவங்க போகிறார்" என்றார்.