சட்டமேதை அம்பேத்கரின் 66-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி நினைவை அனுசரித்து வருகின்றனர். இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''இந்திய உபகண்டத்திற்கு அரசியல் சட்டத்தைத் தந்த நம் மேதை டாக்டர் அம்பேத்கருடைய நினைவு நாளில் அவர் என்ன கொள்கைகளை வகுத்துக் கொடுத்தாரோ, அரசியல் சட்டத்திற்கு என்னென்ன விதிகளை வகுத்துக் கொடுத்தாரோ, அவை அனைத்தையும் குழி தோண்டிப் புதைக்கின்ற அநீதியில் தமிழ்நாட்டினுடைய இன்றைய ஆளுநர் ஆர்.என்.ரவி ஈடுபட்டு வருகிறார். அவருக்கு இல்லாத அதிகாரங்களை அவராகவே எடுத்துக் கொண்டு பிஜேபியினுடைய ஏஜென்டாக; எடுபிடியாக; ஒரு தூதுவராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
டாக்டர் அம்பேத்கருடைய கனவு நனவாக வேண்டும் எனில், முதலில் இந்த ஆளுநரை இங்கிருந்து வெளியே அனுப்ப வேண்டும். மத்திய அரசு அவரை திரும்பப் பெற வேண்டும். அம்பேத்கர் வகுத்த அரசியல் சட்டம் என்பது உலகத்திலேயே இப்படிப்பட்ட ஒரு அரசியல் சட்டம் கிடையாது என்று சொல்லும் அளவிற்கு அவரது அறிவாற்றல் பயன்பட்டது. அவர் உலக நாடுகளுக்கு எல்லாம் ஆலோசனை சொல்லக்கூடிய அளவுக்கு ஆற்றல் மிக்கவர். சட்ட அமைச்சராக இருந்த பொழுது தான் முக்கியமான சில சட்டங்களைக் கொண்டு வந்தார். அதன் பிறகு அவராகவே ராஜினாமா செய்து விட்டுப் போனார். அவருடைய புகழ் என்றைக்கும் மங்காது; மறையாது; ஓங்கி நிற்கும். நிலத்தில் இருக்கும் அம்பேத்கரின் புகழ் மண்ணிருக்கும் வரை விண்ணிருக்கும் வரை இருக்கும்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர்கள், “குஜராத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில், அங்கு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதாக கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. இது தமிழகத் தேர்தல் களத்தில் அரசியல் கூட்டணியில் மாற்றத்தை ஏற்படுத்துமா?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வைகோ, ''வேறு மாநிலங்களில் நடப்பது இங்கே நடக்காது. அது பிரதிபலிக்கவும் செய்யாது. திமுக தலைமையிலான கூட்டணி தொடர்ந்து நீடிக்கும். இந்தியாவில் வேறு மாநிலங்களில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் தமிழ்நாட்டிலே எந்த மாற்றமும் ஏற்படாது'' என்றார்.